கரூரில் கடந்த 27ஆம் தேதி தவெக தலைவர் விஜய் மேற்கொண்ட தேர்தல் பிரச்சாரத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி மொத்தம் 41 பேர் உயிரிழந்தனர். இதனையடுத்து, சிபிஐ விசாரணை, ரூ. 50 லட்சம் இழப்பீடு, உச்சநீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரணை உள்ளிட்ட 7 வழக்குகள் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்யப்பட்டது.
இந்த நிலையில் இந்த வழக்கு இன்று நீதிபதிகள் தண்டபாணி மற்றும் ஜோதிராமன் ஆகியோர் முன் விசாரணைக்கு வந்தது.
இதில், சிபிஐ விசாரணை கோரிய வழக்கில், மனுதாரர் தரப்பு, காவல்துறையின் தவறான நடவடிக்கையால் தான் கூட்ட நெரிசல் ஏற்பட்டுள்ளது என வாதம் செய்யப்பட்டது. அரசு தரப்பு வழக்கறிஞர், பொதுவாக எந்தவித ஆதாரமும் இல்லாமல் மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. எனவே ஆதாரம் இன்றி வழக்கு தாக்கலால் கூட்ட நெரிசல் குறித்து சிபிஐ விசாரணை தேவையில்லை என வாதம் வைக்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கை விசாரித்துவரும் நீதிபதிகள், “கூட்ட நெரிசல் நடந்தது மாநில சாலையா? தேசிய நெடுஞ்சாலையா? எப்படி அனுமதி அளித்தீர்கள்? மாநில நெடுஞ்சாலையில் எவ்வாறு அனுமதி வழங்கினார்கள்? பிற்பகல் 3 மணி முதல் 10 மணி வரை பிரச்சாரத்திற்கு அனுமதி கொடுத்த கடிதம் எங்கே? சாலையின் வடக்கு பகுதியில் தானே அனுமதி வழங்கப்பட்டது?” என சரமாரியாக கேள்விகளை எழுப்பினர்.
இதற்கு பதில் அளித்த அரசு தரப்பு, சாலையின் வடக்கு பகுதியில் தான் பிரச்சாரத்திற்கு அனுமதி வழங்கப்பட்டது. அனுமதிக்கப்பட்ட இடத்தில் உரிய அனுமதி பெற்றுதான் கூட்டம் நடத்தினார்கள் எனத் தெரிவிக்கப்பட்டது.
இதனையடுத்து உயர்நீதிமன்ற மதுரைக் கிளை, “விஜய் கூட்டத்தில் குடிநீர் வழங்கப்பட்டதா? குடிநீர், சுகாதார வசதிகளை சட்டம் ஒழுங்கு காவலர்கள் கண்காணித்தார்களா? பொதுமக்களின் உயிரை பாதுகாக்க வேண்டியது காவல்துறை. தேசிய, மாநில நெடுஞ்சாலைகளில் பிரச்சாரங்களுக்கு அனுமதி வழங்கக்கூடாது” எனத் தெரிவித்துள்ளது.
இதனைப்போலவே, பரப்புரைகளுக்கு வழிகாட்டு நெறிமுறை கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவில், பரப்புரைகளுக்கு வழிகாட்டு நெறிமுறை கோரி மனு தாக்கல் செய்ததால் வீட்டில் வந்து மிரட்டினார்கள் என மனுதாரர் தரப்பில் வாதம் முன் வைக்கப்பட்டது.
அது குறித்து காவல்துறையில் புகார் கொடுங்கள் என நீதிமன்றம் அறிவுறுத்தியதும், வழிகாட்டு நெறிமுறைக்கு குறிப்பிட்ட சட்டத்தை இயற்ற அரசுக்கு உத்தரவிடமுடியாது எனவும் தெரிவித்துள்ளது.
மேலும், இது ஒரு துயர சம்பவம், விசாரணை நடைபெற்று வருகிறது. நீதிமன்றத்தை அரசியல் மேடை ஆக்க வேண்டாம் என மனுதாரர்களுக்கு நீதிமன்றம் அறிவுரை சொல்லி சந்திரேசன் உள்ளிட்டோர் தாக்கல் செய்த மனுக்களை முடித்துவைத்தது நீதிமன்றம். மேலும், ரூ. 50 லட்சம் இழப்பீடு வழங்க கோரிய வழக்கை ஒத்திவைத்துள்ளது உயர்நீதிமன்ற மதுரை கிளை.
இந்த வழக்கு தொடக்கக்கட்ட விசாரணையில் இருக்கிறது என கூறிய, சிபிஐ விசாரணைக்கு மறுப்பு தெரிவித்து, சிபிஐ விசாரணை கோரிய அனைத்து மனுக்களையும் முடித்துவைத்தனர்
மொத்தம் தாக்கல் செய்யப்பட்ட 7 மனுக்களில் சிபிஐ விசாரணை கோரி தாக்கல் செய்யப்பட்ட இரு மனுக்களையும் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. ரூ. 50 லட்சம் இழப்பீடு கோரிய மனு மீது அரசு பதில் மனு தாக்கல் செய்யச் சொல்லி தள்ளி வைக்கப்பட்டுள்ளது.