கடந்த 27ஆம் தேதி கரூர் வேலுச்சாமிபுரத்தில் நடந்த தவெக தலைவர் விஜயின் பரப்புரைக் கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர்.
இதுதொடர்பான வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், கூட்ட நெரிசல் குறித்து ஐ.ஜி. அஸ்ரா கர்க் தலைமையிலான சிறப்பு புலனாய்வுக் குழு விசாரிக்க உத்தரவிட்டிருந்தது. இந்த உத்தரவை எதிர்த்து தவெக தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.
அதே வேலையில், கூட்ட நெரிசல் வழக்கை CBI க்கு மாற்றக் கோரி பாஜக மற்றும் கூட்ட நெரிசலில் பாதிக்கப்பட்டோர் தரப்பில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
இந்த நிலையில், அனைத்து தரப்பு வாதங்களை கேட்ட நீதிபதிகள், கரூர் கூட்ட நெரிசல் வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றி அதிரடி உத்தரவிட்டனர். மேலும் சிபிஐ விசாரணையை மேற்பார்வையிட ஓய்வு பெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி அஜய் ரஸ்தோகி தலைமையில் இரண்டு IPS அதிகாரிகள் கொண்ட சிறப்பு புலனாய்வுக் குழுவை அமைத்தும் உத்தரவிட்டனர்.
இதனிடையே, கரூர் கூட்ட நெரிசல் விவகாரத்தில் மனுதாரர்களுக்கு தெரியாமலேயே CBI விசாரணை கோரி மனுக்கல் தாக்கல் செய்யப்பட்டிருப்பது மிகப்பெரிய மோசடி என்று தமிழ்நாடு அரசு தரப்பில் முறையிடப்பட்டது. இதனைக் கேட்ட நீதிபதிகள், போலி மனுத்தாக்கல் செய்த விவகாரத்தை விரிவாக ஆய்வு செய்த பின்னர் தேவைப்பட்டால் CBI விசாரணைக்கு உத்தரவிடப்படும் என்று தெரிவித்தனர்.
இந்த நிலையில், கரூர் கூட்ட நெரிசல் வழக்கை CBI க்கு மாற்றி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில் தவெக தலைவர் விஜய் தனது எக்ஸ் தளத்தில் இதுகுறித்து பதிவிட்டுள்ளார். அதில், “நீதி வெல்லும்!”என்று ஒற்றை வார்த்தையில் பதிவிட்டுள்ளார். இந்த பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
