Monday, August 4, 2025
HTML tutorial

கருணாநிதி நினைவு நாள் : மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைதிப்பேரணி

மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின்7வது நினைவு தினமான வருகிற 7-ந்தேதி திமுக சார்பில் அமைதி பேரணி நடைபெறும் என அக்கட்சி சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக அக்கட்சி சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது;

“தகைமைசால் தலைவராக – எழுத்தாளராக – கவிஞராக -சொற்பொழிவாளராக -திரைக்கதை வசனகர்த்தாவாக -இலக்கியவாதியாக – திரைப்படத் தயாரிப்பாளராக தலைசிறந்த நிர்வாகியாக – தமிழகத்தின் ஐந்து முறை முதலமைச்சராக – உலகத் தமிழர்களின் ஒப்பற்ற தலைவராக விளங்கியவரும், திராவிட இயக்கத்தின் போர்வாட்களில் ஒருவராகத் தமது பொதுவாழ்வைத் தொடங்கி, பின்னர், காஞ்சி தந்த காவியத் தலைவர் அறிஞர் அண்ணா அவர்களோடு திராவிட முன்னேற்றக் கழகத்தில் தொடர்ந்து பணியாற்றி, அண்ணா அவர்களின் மறைவுக்குப் பிறகு, திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவராக ஏறத்தாழ 50 ஆண்டுகள் பொறுப்பு வகித்து, அகில இந்திய அரசியலில் சிறந்த வழிகாட்டியாகத் திகழ்ந்து, தமிழக வரலாற்றில் தமக்கென்று சில பக்கங்களை ஒதுக்கிக்கொண்ட முத்தமிழறிஞர் தமிழினத் தலைவர் கலைஞரின் 7வது நினைவுநாளினையொட்டி தமிழ்நாடு முதலமைச்சர், கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் கழகப் பொதுச்செயலாளர் துரைமுருகன், பொருளாளர் டி.ஆர்.பாலு, எம்.பி., முதன்மைச் செயலாளர், துணைப் பொதுச்செயலாளர்கள் உள்ளிட்ட கழக முன்னணியினர் கலந்து கொள்ளும் “அமைதிப் பேரணி”, ஆகஸ்ட்-7, வியாழக்கிழமை அன்று காலை 7.00 மணிக்கு சென்னை, அண்ணா சாலை, ஓமந்தூரார் வளாகத்தில் அமைந்துள்ள முத்தமிழறிஞர் கலைஞர் சிலை அருகிலிருந்து புறப்பட்டு, காமராஜர் சாலையில் அமைந்துள்ள கலைஞர் நினைவிடத்தில் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்துவர்.

அமைச்சர்கள், மாவட்டக் கழகச் செயலாளர்கள்- முன்னாள் – இந்நாள் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், தலைமைக் கழகச் செயலாளர்கள், தலைமைச் செயற்குழு பொதுக்குழு உறுப்பினர்கள், மாவட்டக் கழக, பகுதிக் கழக, வட்டக் கழக நிர்வாகிகள், மாநகராட்சி மன்ற உறுப்பினர்கள் மற்றும் அனைத்து அணியினரும் முத்தமிழறிஞர் கலைஞரின் நினைவு போற்றி அஞ்சலி செலுத்த திரண்டு வாரீர் என சென்னை கிழக்கு சென்னை வடக்கு சென்னை வடகிழக்கு சென்னை மேற்கு சென்னை தென்மேற்கு சென்னை தெற்கு ஆகிய மாவட்டக் கழகங்களின் சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.”

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்

Follow on Google News

Related News
HTML tutorial
Latest News