மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்துள்ள ‘தக் லைப்’ திரைப்படம் வரும் ஜூன் 5-ந்தேதி வெளியாக உள்ளது. இந்த படத்தின் புரமோஷன் பணிகள் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கன்னட நடிகர் சிவராஜ்குமார் கலந்து கொண்டார்.
அப்போது பேசிய நடிகர் கமல் சிவராஜ்குமார் மொழி (கன்னடம்) தமிழ் மொழியில் இருந்து பிறந்தது. அவரும் நமது குடும்பத்தில் ஒரு அங்கமாவார். அதனால்தான் சிவராஜ்குமார் இங்கு வந்துள்ளார் என பேசியுள்ளார்.
இதையடுத்து தமிழில் இருந்து கன்னடம் பிறந்ததாக கூறி கன்னட மக்களை கமல் அவமதுவிட்டதாக கன்னட அமைப்புகள் போர்க்கொடி தூக்கி உள்ளன. மேலும் ‘தக் லைப்’ படத்தின் போஸ்டர்களை கிழித்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் கமல்ஹாசனின் பேச்சுக்கு தொல். திருமாவளவன் ஆதரவு தெரிவித்துள்ளார். இது குறித்து பேசிய அவர் : “தமிழ்தான் திராவிட மொழிகளின் தாய் என்பதை மொழியியல் வல்லுநர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர். கன்னடம், மலையாளம் பேசுவோர் இந்த உண்மையை ஏற்க மறுக்கலாம். ஆனால் வரலாறு இதுதான்” எனக் கூறியுள்ளார்.