கடந்த மாதம் உலகையே உலுக்கிய துருக்கி நிலநடுக்க சம்பவத்தில் பலியானோர் எண்ணிக்கை ஐம்பதாயிரத்தை கடந்துள்ள நிலையில், பதினாறாயிரத்திற்கும் மேற்பட்ட கட்டடங்கள் சரிந்து விழுந்து சேதமாகியுள்ளன.
லட்சக்கணக்கான மக்களின் அடிப்படை வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு இயல்பு நிலை முற்றிலுமாக முடங்கி உள்ளது.
உலக நாடுகள் தொடர்ந்து துருக்கிக்கு உதவி வரும் நிலையில், கள்ளக்குறிச்சி மாவட்டத்தை சேர்ந்த சின்ன மணியாந்தல் அரசுப்பள்ளி மாணவர்கள் துருக்கிக்காக ஏழாயிரம் ருபாய் நிதி திரட்டியுள்ளனர்.
மாவட்ட ஆட்சியரிடம் சமர்ப்பிக்கப்பட உள்ள இந்த நிதி, இந்திய நாடு துருக்கிக்கு அளிக்கும் நிதியோடு சேர்த்து வழங்கப்படும். நிலநடுக்கத்தால் ஒன்பது லட்சம் கோடி சொத்துக்களை இழந்து நிற்கும் துருக்கி அரசுக்கு, இடிபாடுகளை அகற்ற உடனடியாக தொள்ளாயிரம் கோடிகளும், கட்டமைப்புகளை மீண்டும் உருவாக்க எண்பத்திரெண்டாயிரம் கோடிகளும் தேவைப்படுகிறது.
இவ்வளவு பெரிய தேவைக்கு நடுவே மாணவர்களின் பங்களிப்பு சிறியது என்றாலும் கூட, மனிதநேய சிந்தனையை வலியுறுத்தும் வகையில் இச்செயல் அமைந்துள்ளது என்பதில் மாற்றுக்கருத்தில்லை.