தமிழகத்தில் விரைவில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ளது. தேர்தலுக்கான வாக்குப்பதிவு தேதி ஏப்ரலில் அறிவிக்கப்பட வாய்ப்புள்ளதால், கூட்டணிக் கட்சிகளுடனான பேச்சுவார்த்தையில், கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளன.
சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக பொருளாளர் டி.ஆர். பாலு தலைமையிலான 7 பேர் கொண்ட குழுவினர் ஐ.எம்.யு.எல். தேசியத் தலைவர் காதர் மொகிதீன் உள்பட அக்கட்சி நிர்வாகிகளுடன் இன்று பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
திமுக உடனான பேச்சுவார்த்தைக்குப் பிறகு செய்தியாளர்கள் சந்திப்பின்போது இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் (ஐ.எம்.யு.எல்.) தேசியத் தலைவர் காதர் மொகிதீன் மயங்கி விழுந்தார். உடன் இருந்த நிர்வாகிகள் உடனடியாக அவருக்கு முதலுதவி அளிக்க அண்ணா அறிவாலயத்திற்குள் அழைத்துச் சென்றனர். இதனால், அங்கு சற்று நேரம் பரபரப்பு நிலவியது.
