‘ஒரே செகண்ட் தான்..’ அமெரிக்காவே நடுங்கும் ஈரானின் ‘தோள்பட்டை’ ஏவுகணை!

அமெரிக்கா மற்றும் ஈரான் இடையேயான போர் மேகங்கள் சூழ்ந்துள்ள நிலையில், அதிநவீன அமெரிக்கப் போர் விமானங்களுக்கு சிம்மசொப்பனமாக உருவெடுத்துள்ள ஒரு சிறிய ஆயுதம் குறித்து தற்போது உலக நாடுகள் விவாதிக்கத் தொடங்கியுள்ளன. அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், ஈரானிடம் வான் பாதுகாப்பு வசதிகள் இல்லை என்றும், அமெரிக்க விமானங்கள் தடையின்றி அங்கு பறக்க முடியும் என்றும் கூறி வந்த நிலையில், கடந்த சில நாட்களில் அமெரிக்காவின் எஃப்-15ஈ (F-15E) மற்றும் ஏ-10 போர் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டது வெள்ளை மாளிகையை அதிரச் செய்துள்ளது. குறிப்பாக, உலகின் மிகவும் பாதுகாப்பானதாகக் கருதப்படும் 5-வது தலைமுறை ஸ்டெல்த் விமானமான எஃப்-35 (F-35) கூட ஈரானின் தரைவழித் தாக்குதலில் சேதமடைந்துள்ளது, அமெரிக்காவின் வான்வழி ஆதிக்கத்திற்கு விடப்பட்ட மிகப்பெரிய சவாலாகப் பார்க்கப்படுகிறது.

இந்தத் தாக்குதல்களுக்குப் பின்னால் சீனா மறைமுகமாக ஈரானுக்கு உதவி வருவதாகப் பலமான சந்தேகங்கள் எழுந்துள்ளன. ஈரானுக்குச் சுமார் 1,000-க்கும் மேற்பட்ட ‘மேன்பேட்ஸ்’ (MANPADs) எனப்படும் தோளில் வைத்து இயக்கும் ஏவுகணைகள் சீனாவிலிருந்து மூன்றாவது நாடுகள் வழியாக வந்து சேரப்போவதாக உளவுத்துறை தகவல்கள் தெரிவிக்கின்றன. மேன்பேட்ஸ் என்பது ஒரு தனி நபர் தனது தோளில் சுமந்து சென்று எதிரி நாட்டு விமானங்களை நோக்கி ஏவக்கூடிய சிறிய ரக ஏவுகணையாகும். இவை மிகக் குறைந்த விலையிலானவை, எங்கு வேண்டுமானாலும் எளிதாக மறைத்து வைக்கக்கூடியவை. இவை ரேடார்களில் சிக்காமல் அகச்சிவப்பு கதிர்கள் மூலம் விமானத்தின் வெப்பத்தை வைத்துத் துல்லியமாகத் தாக்கும் என்பதால், அமெரிக்காவின் அதிநவீன தொழில்நுட்பங்களும் இதனிடம் தோற்றுப்போகும் அபாயம் உள்ளது.

தற்போது அமெரிக்கா வான்வழித் தாக்குதல்களில் ஈடுபட்டு வரும் நிலையில், ஒருவேளை தரைவழிப் போரைத் தொடங்கினால் இந்த மேன்பேட்ஸ் ஏவுகணைகள் எமனாக மாறக்கூடும். ஏனெனில், தரைப்படை வீரர்களுக்குப் பாதுகாப்பு வழங்க அமெரிக்க விமானங்கள் தாழ்வாகப் பறக்க வேண்டியிருக்கும். அப்போது ஈரானின் மலைப்பகுதிகளில் மறைந்திருக்கும் வீரர்கள், இந்தத் தோள்பட்டை ஏவுகணைகள் மூலம் அமெரிக்க விமானங்களை எளிதாகச் சிதைக்க முடியும். சீனா இந்த ஆயுத விற்பனையைத் தொடர்ந்து மறுத்து வந்தாலும், ஈரான் ஏற்கனவே சீனாவின் உளவுச் செயற்கைக்கோள்களைப் பயன்படுத்தி அமெரிக்கத் தளங்களைத் துல்லியமாகக் குறிவைத்து வருவது உறுதி செய்யப்பட்டுள்ளது.

அதிபர் ட்ரம்ப், சீனாவின் அதிபர் ஜி ஜின்பிங்கிற்குப் போர் உதவிகளை நிறுத்தக் கோரி கடிதம் எழுதியுள்ளதோடு, ஆயுதங்களை விற்பனை செய்யும் நாடுகளுக்கு 50 சதவீத வரி விதிக்கப்படும் என்றும் எச்சரித்துள்ளார். இருப்பினும், ஈரான் ஏற்கனவே சீனத் தொழில்நுட்பத்தின் உதவியுடன் புதிய வான் பாதுகாப்பு அமைப்புகளை உருவாக்கி வருவதாகக் கூறப்படுகிறது. அமெரிக்காவின் வான்வழி வலிமையையே முடக்கிப் போடும் வல்லமை கொண்ட இந்தச் சிறிய ஏவுகணைகள், போரின் போக்கையே மாற்றியமைக்கக்கூடும் என்று ராணுவ வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர்.

Related News

Latest News