Thursday, July 31, 2025

“JIO vs STARLINK: இந்தியாவின் ‘DATA வார்’ தொடங்கிட்டுச்சு! எதுபெஸ்ட்?

இந்தியாவில் இணையத்தை முழுமையாக மாற்றப்போகும் ஒரு புதிய கட்டத்திற்கு நாம் நெருங்கியிருக்கிறோம். எலான் மஸ்க்கின் ஸ்டார்லிங்க் நிறுவனம், இந்திய தொலைத்தொடர்புத் துறையிடமிருந்து செயற்கைக்கோள் இணைய சேவைகளுக்கான உரிமத்தை பெற்றிருக்கிறது. இது நாட்டில் வணிக நடவடிக்கைகளைத் தொடங்குவதற்கான ஒரு முக்கியமான மைல்கல்லாக இருக்கிறது.

யூடெல்சாட் ஒன்வெப் (Eutelsat oneweb) மற்றும் ரிலையன்ஸ் ஜியோ சேட்டிலைட் கம்யூனிகேஷன்ஸ் ஆகியவற்றுக்குப் பிறகு, ஸ்டார்லிங்க் இந்த உரிமத்தை பெற்ற மூன்றாவது நிறுவனம் ஆகும். ஸ்டார்லிங்கின் நோக்கம் தெளிவானது – இந்தியாவின் தொலைதூர மற்றும் இணைய வசதி குறைந்த பகுதிகளில் இணைய அணுகலை வழங்குவது.

இந்த நிறுவனத்தின் சேவைகள் அடுத்த இரண்டு மாதங்களில் இந்தியாவில் தொடங்கப்போகின்றன. புதிய வாடிக்கையாளர்களை ஈர்க்க, ஸ்டார்லிங்க் ஒரு மாத இலவச சோதனை வாய்ப்பையும் வழங்குகிறது.

ஆனால் இதில் உள்ள ஒரு முக்கியமான கேள்வி – விலை. ஸ்டார்லிங்க் சாதனத்தின் விலை ரூ.33,000, மேலும் மாதாந்திர சந்தா ரூ.3,000 வரை. இது இந்தியாவின் விலை உணர்திறன் கொண்ட சந்தைக்கு மிகுந்த சவாலை உருவாக்குகிறது. இதில் ரிலையன்ஸ் ஜியோவுடன் ஒப்பிட்டால் பெரிய வித்தியாசம் தெரிகிறது.

ஜியோஃபைபர் திட்டங்கள் ரூ.399 முதல் ரூ.1,499 வரை மட்டுமே, மேலும் நிறுவல் கட்டணமும் ஸ்டார்லிங்குடன் ஒப்பிடும் போது மிகக் குறைவு.

ஜியோ ஃபைபர்-டு-தி-ஹோம்(Fibre to the Home) தொழில்நுட்பத்தை பயன்படுத்துகிறது. இது நமக்குத் தெரிந்த அதிவேக மற்றும் நிலையான இணைய சேவையை வழங்கும் வழி. அதே நேரத்தில், ஸ்டார்லிங்கின் செயற்கைக்கோள்கள் நம் மேலே விண்வெளியில் சுற்றி கொண்டிருப்பவை, அதனால் எவ்வளவு தொலைதூர இடமோ அங்கு கூட இணைய இணைப்பு தர முடியும்.

வங்கதேசம், பூட்டான் போன்ற நாடுகளிலும் ஸ்டார்லிங்கின் சாதன விலை இதே ரூ.33,000 தான். தற்போது 100க்கும் மேற்பட்ட நாடுகளில் செயல்படும் ஸ்டார்லிங்க், குடியிருப்பு மற்றும் மொபைல் பயனர்களுக்கான தனித்தனித் திட்டங்களை வழங்குகிறது.

இந்த ஆண்டின் தொடக்கத்தில், ஸ்டார்லிங்க், இந்தியாவின் முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனங்களான ஜியோ மற்றும் ஏர்டெல் ஆகியோருடன் ஒப்பந்தங்களிலும் கையெழுத்திட்டுள்ளது.

எல்லாம் சரி, ஆனாலும் விலை உயர்வு போன்ற சவால்களை எப்படி சமாளிக்கப்போகிறார்கள்? இந்திய சந்தையில் ஸ்டார்லிங்க் இடம் பிடிக்குமா இல்லையா? என்பதற்கான பதில், நிச்சயமாக சந்தையின் எதிர்வினையைப் பொறுத்துதான் தீர்மானிக்கப்படும்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்

Follow on Google News

Related News
Latest News