ரிலையன்ஸ் ஜியோ தனது ரூ.195 கிரிக்கெட் டேட்டா பிளானில் முக்கியமான மாற்றத்தை அறிவித்துள்ளது. விலையில் எந்த மாற்றமும் இல்லாமல் இருந்தாலும், இந்த திட்டத்தின் செல்லுபடியாகும் காலத்தை குறைத்திருப்பது பயனர்களுக்கு நேரடி பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.
முன்பு, இந்த ரூ.195 பிளான் 90 நாட்கள் வரை செல்லுபடியாக இருந்தது. ஆனால் தற்போது செய்யப்பட்ட மாற்றத்தின் மூலம், அதன் வேலிடிட்டி 30 நாட்களாக குறைக்கப்பட்டுள்ளது. அதாவது, அதே விலையில் 60 நாட்கள் செல்லுபடியாகும் காலம் குறைக்கப்பட்டதால், இது மாதாந்திர செலவை அதிகரிக்கும் மாற்றமாக பார்க்கப்படுகிறது.
இந்த திட்டத்தின் டேட்டா சலுகைகள் மாற்றமின்றி தொடர்கின்றன. பயனர்களுக்கு மொத்தமாக 15GB அதிவேக டேட்டா வழங்கப்படுகிறது. இந்த டேட்டா முடிந்த பிறகு, இணைய வேகம் 64Kbps ஆக குறைக்கப்படும்.
இந்த பிளான் முழுக்க டேட்டா அடிப்படையிலானது என்பதால், இதில் குரல் அழைப்புகள் அல்லது எஸ்எம்எஸ் சலுகைகள் இடம்பெறாது. ஆனால், கூடுதல் பலனாக 90 நாட்களுக்கு JioHotstar மொபைல் சந்தா இலவசமாக வழங்கப்படுகிறது. இதன் மூலம் கிரிக்கெட் போட்டிகள், திரைப்படங்கள் மற்றும் வெப் சீரிஸ்களை பார்க்க முடியும்.
