Thursday, February 5, 2026

ட்ரம்புக்கு அமைதிக்கான நோபல் பரிசு! ஆதரவுக் கரம் நீட்டும் ஜப்பான் பிரதமர்!

அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்புக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்க வேண்டும் என்ற கருத்தை ஜப்பானின் புதிய பிரதமர் சனே தகைச்சி ஆதரித்துள்ளார்.

ஆசியா சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக மலேசியாவுக்கு சென்ற ட்ரம்ப், அங்கு நடைபெற்ற ஆசிய உச்சி மாநாட்டில் கலந்து கொண்டார். அப்போது தாய்லாந்து மற்றும் கம்போடியா இடையிலான பதற்றத்தை தணிக்க சமரசம் செய்த அவர், இரு நாடுகளுக்கும் இடையே சமாதான ஒப்பந்தத்தை ஏற்படுத்தியதாக தெரிவிக்கப்பட்டது.

அதன்பின் ஜப்பான் சென்ற ட்ரம்ப், அந்நாட்டின் பிரதமர் சனே தகைச்சியை சந்தித்து பல்வேறு விஷயங்களில் ஆலோசனை நடத்தினார். அந்த சந்திப்பில், ‘தாய்லாந்து–கம்போடியா சமாதான ஒப்பந்தம் மற்றும் மத்தியக் கிழக்கில் ஏற்பட்டுள்ள அமைதி நடவடிக்கைகள் ட்ரம்பின் முக்கிய சாதனைகளாகும்’ என்று தகைச்சி பாராட்டியதாகவும், ட்ரம்புக்காக அமைதிக்கான நோபல் பரிசை ஆதரிப்பதாகவும் வெள்ளை மாளிகை வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில் ஜப்பான் விரைவில் இதுகுறித்து தனியாக அறிக்கை வெளியிடும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. ட்ரம்ப் ஜப்பான் பயணத்தை முடித்து தென் கொரியாவுக்குச் செல்லவுள்ளார். அங்கு நடைபெறவுள்ள ஆசியா–பசுபிக் பொருளாதார ஒத்துழைப்பு உச்சி மாநாட்டில் பங்கேற்கும் அவர், சீன அதிபர் ஜி ஜின்பிங்கை சந்தித்து உரையாட உள்ளார்.

2025ம் ஆண்டுக்கான அமைதிக்கான நோபல் பரிசு வெனிசுலா எதிர்க்கட்சித் தலைவர் மரியா கொரினா மச்சாடோவுக்கு வழங்கப்பட்டிருந்தாலும், அதற்கு முன் அந்த விருதுக்காக ட்ரம்ப் பல்வேறு நாடுகளின் ஆதரவை பெற்றிருந்தார். இப்போது, ஜப்பானும் அதில் இணைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Related News

Latest News