சென்னை, எண்ணூர் பகுதியிலுள்ள ஒரு வீட்டு கட்டுமான பணிக்காக பள்ளம் தோண்டியபோது, முஸ்தபா என்பவருக்கு ஒரு மர்ம பொருள் கிடைத்தது. அதை வெறும் கல்லோ வெறும் இரும்போ என்று நினைக்காமல், அவர் நேராக காவல்துறைக்கு தகவல் கொடுத்தார். வந்த போலீசாரும், பாதுகாப்புப் பிரிவும் அதைப் பார்த்தவுடன் அதிர்ச்சி அடைந்தனர். அந்த பொருளை ஆராய்ந்த அவர்கள் இது இரண்டாம் உலகப் போரின் போது ஜப்பான் வான் வழியாக வீசிய குண்டு என்று கூறிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது!
இதை கேட்டவுடனே மக்கள் மனதில் எழுந்த கேள்வி – சென்னை எப்போது தாக்குதலுக்குள்ளானது? சென்னை மீது ஜப்பான் குண்டு வீசியதா? என்பது தான் ….இதற்கான பதில் என்னவன்றால் ஆமாம்… இது உண்மைதான்…
1943ஆம் ஆண்டு, இரண்டாம் உலகப் போர் தீவிரமடைந்த நேரத்தில், அன்றைய மெட்ராஸ் துறைமுக பகுதியை ஜப்பான் விமானம் குறிகொண்டு சில குண்டுகளை வீசியது. அதனால் பெரிய சேதம் ஏதும் நேரவில்லை என்றாலும், அது ஒரு வரலாற்று தாக்குதலாக பதிவு செய்யப்பட்டிருக்கிறது. ஆனால் இதை குறித்த தகவல் அந்த நேரத்தில் பொதுமக்களுக்கு உடனடியாக தெரியவில்லை.
ஏன் தெரியவில்லையென்றால், அன்றைய அக்டோபர் மாதத்தில் சென்னை மழை வெள்ளத்தில் தத்தளிக்க, மின் துண்டிப்பு ஏற்பட்டது. நகரம் இருளில் மூழ்கியதால் ரேடியோவும், நாளிதழ்களும் செயலிழந்தன. இதனால் அந்த தாக்குதல் நிகழ்ந்ததை மக்கள் நாள்கள் கழித்து தான் அறிந்தனர்.
இந்த நிகழ்வை வரலாற்றாசிரியர் வெங்கடேஷ் ராமகிருஷ்ணனும், முன்னாள் வெளியுறவுத் துறை செயலாளர் கிருஷ்ணன் ஸ்ரீனிவாசனும் தங்கள் உரைகளில் உறுதியாகக் கூறியுள்ளனர். இப்போது மெட்ராஸ் மீது ஜப்பான் குண்டு வீசியது வரலாற்று ஆதாரங்களுடன் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
மறைந்திருந்த இந்த வரலாற்று துணுக்கம் இன்று ஒரு பள்ளத்திலிருந்து மீண்டு வந்திருப்பது ஒரு புதிய பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.