இறந்துபோன நபருக்கு லாட்டரிச் சீட்டில் 33 லட்ச ரூபாய் பரிசு கிடைத்துள்ள தகவல் வலைத்தளங்களில் பரபரப்பானது.
கடந்த 2020 ஆம் ஆண்டு, செப்டம்பர் 24 ஆம் தேதி கனடாவின் ஒன்றோரியோ மாகாணத்தில் ஹுரான் கவுண்டி கடற்கரையில் இறந்தவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டது.
படகில் சென்ற கிரிகோரி ஜார்விஸ் என்ற அந்த நபர் நிலைதடுமாறி கடலுக்குள் விழுந்து, அங்குள்ள பாறை ஒன்றில் தலை மோதியதால் இறந்திருக்கலாம் என்று போலீசார் சந்தேகித்தனர்.
இறந்த நபரைப் பரிசோதித்தபோது இறந்தவர் அணிந்திருந்த சட்டைப் பையில் லாட்டரிச் சீட்டு ஒன்று இருந்ததைக் கண்டெடுத்தனர். இறந்த நபரைப் பற்றி போலீசார் விசாரிக்கத் தொடங்கினர். அப்போதுதான் ஒரு மகிழ்ச்சியான செய்தி போலீசாருக்கு கிடைத்தது.
இறந்துபோன நபரின் சட்டைப் பையில் இருந்த அந்த லாட்டரிச் சீட்டுக்கு 45 ஆயிரம் டாலர் பரிசு கிடைத்துள்ளது தெரியவந்தது. இருந்தாலும், போலீசார் நேர்மையாக செயல்பட்டனர். அதைத் தொடர்ந்து இந்தப் பரிசுத் தொகை இறந்தவரின் உறவினர்களிடம் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
போலீஸ் விசாரணையில் இறந்த நபர் அமெரிக்காவின் மிக்ஸிகன் மாகாணத்தைச் சேர்ந்தவர் என்பது தெரியவந்துள்ளது.