உலகமே ஒரு மாபெரும் போரின் விளிம்பில் நின்றுகொண்டிருக்க, இப்போது அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் வெளியிட்டிருக்கும் அந்த ஒரு அறிவிப்பு சர்வதேச அரங்கில் பெரும் பகீரை கிளப்பியுள்ளது. ஈரானுடன் ஒரு “மாபெரும் சமாதான ஒப்பந்தம்” எட்டப்பட்டுவிட்டதாக வெள்ளை மாளிகையில் பேசிய ட்ரம்ப் அதிரடியாகக் கூறியுள்ளார். இந்த ஒப்பந்தத்திற்கான ஆவணங்கள் கிட்டத்தட்ட இறுதி வடிவம் பெற்றுவிட்டதாகவும், இன்னும் சில நாட்களில் ஐரோப்பாவில் வைத்து இதற்கான அதிகாரப்பூர்வ கையெழுத்து நிகழ்ச்சி நடைபெறும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
ட்ரம்ப் தனது பேச்சில் ஈரானை மிகக் கடுமையாகச் சாடியுள்ளார். “ஈரான் ஒரு மிகப்பெரிய அடியை வாங்கியிருக்கிறது, வேறு யாராலும் தாங்க முடியாத அளவுக்கு அவர்கள் சிதைந்து போயிருக்கிறார்கள். அதனால் தான் அமெரிக்காவை விட, ஈரான் தான் இப்போது இந்த ஒப்பந்தத்தை அதிகம் விரும்புகிறது” என்று ட்ரம்ப் மார்தட்டியுள்ளார். இந்த ஒப்பந்தத்தின் மூலம் ஈரான் இனி ஒருபோதும் அணு ஆயுதங்களைத் தயாரிக்க முடியாது என்பது உறுதி செய்யப்படும் என்றும், இதன் விளைவாக உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்து, விலைவாசி கட்டுக்குள் வரும் என்றும் அவர் நம்பிக்கையூட்டியுள்ளார்.
ஆனால், ட்ரம்ப் இவ்வளவு தூரம் உறுதியாகச் சொன்னாலும், ஈரானிடமிருந்து வந்திருக்கும் பதில் அப்படியே தலைகீழாக இருக்கிறது. ஈரானிய வெளியுறவுத்துறை அமைச்சகம் ட்ரம்ப்பின் இந்தக் கூற்றைத் திட்டவட்டமாக மறுத்துள்ளது. “ஒப்பந்தம் குறித்து இன்னும் எந்த இறுதி முடிவும் எடுக்கப்படவில்லை, எங்களின் ‘சிவப்புக் கோடுகளை’ நாங்கள் ஒருபோதும் விட்டுக்கொடுக்க மாட்டோம்” என்று ஈரான் மிரட்டல் விடுத்துள்ளது. குறிப்பாக, ஹார்முஸ் நீர்ச்சந்தி திறக்கப்படும் என்ற ட்ரம்ப்பின் அறிவிப்பை ஈரான் அடியோடு மறுத்துள்ளது. “ஹார்முஸ் நீர்ச்சந்தி இன்னும் ஈரானின் முழுக் கட்டுப்பாட்டில் தான் இருக்கிறது, அங்கே மற்ற கப்பல்கள் பாதுகாப்பாகப் பயணம் செய்வது இப்போதைக்குச் சாத்தியமே இல்லை” என்று ஈரான் பிடிவாதம் காட்டி வருகிறது.
அமெரிக்கா என்னவோ போர் முடிந்துவிட்டது, சமாதானம் வந்துவிட்டது எனக் கொண்டாடி வருகிறது. ஆனால் ஈரானோ, அமெரிக்கா அடிக்கடி தனது நிலைப்பாட்டை மாற்றுவதாகவும், இன்னும் பல முக்கிய விஷயங்களில் உடன்பாடு ஏற்படவில்லை என்றும் குற்றம் சாட்டுகிறது. ஒரு பக்கம் ட்ரம்ப் “ஈரானியத் தலைமை இப்போது புத்திசாலித்தனமாகச் செயல்படுகிறது” எனப் புகழ்கிறார், மறுபக்கம் ஈரான் “எந்த ஒப்பந்தத்தையும் நாங்கள் இன்னும் ஏற்கவில்லை” எனப் போர்க்கொடி தூக்குகிறது.
இந்த வார இறுதியில் ஐரோப்பாவில் நடக்கவிருக்கும் அந்தச் சந்திப்பு தான் போரின் தலைவிதியைத் தீர்மானிக்கப் போகிறது. ஒருவேளை ட்ரம்ப் சொல்வது போல ஒப்பந்தம் கையெழுத்தானால், அது உலக நாடுகளுக்கு ஒரு நிம்மதிப் பெருமூச்சாக இருக்கும். இல்லையென்றால், இந்த இழுபறி ஒரு மிகப்பெரிய உலகப்போருக்கே வழிவகுக்கும் என்பதில் சந்தேகமே இல்லை.
