தமிழ்நாட்டில் 2026ம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அரசியல் கட்சிகளின் கூட்டணி கணக்குகள் தொடங்கிவிட்டன. ஆளும் திமுக பலம் வாய்ந்த கூட்டணியுடன் வரும் தேர்தலை எதிர்கொள்ள இருப்பதாக கூறப்படுகிறது.
இதனைப்போலவே அதிமுக பாஜகவுடன் மீண்டும் கூட்டணி வைத்து ஆட்சியை பிடிக்க கட்சி சார்ந்த வேலைகளை தொடங்கிவிட்டது. ஒவ்வொரு முறையும் தனித்து நிற்கும் நாம் தமிழர் கட்சி இந்தமுறையும் தனித்தேதெரிதலை சந்திக்க போகிறது.ஏற்கெனவே அதிமுக கூட்டணியில் இருந்த பாமக, தேமுதிக ஆகிய கட்சிகள் தங்களது நிலைப்பாட்டை இன்னும் தெளிவுபடுத்தவில்லை.
இதில் இந்தமுறை புதிதாக களத்துக்கு வந்திருக்கும் விஜய் தங்களுடன் கூட்டணிக்கு வந்தால் ஆட்சியிலும் பங்கு அதிகாரத்திலும் பங்கு கொடுக்கப்படும் என புதிய அரசியல் முழக்கத்தை முன் வைத்துள்ளார். எனவே தமிழகத்தில் வரக்கூடிய சட்டமன்ற தேர்தலில் நான்குமுனை போட்டிக்கு வாய்ப்பிருப்பதாக தெரிகிறது. ஆனாலும் டிசம்பரில் அரசியல் கட்சிகளின் கூட்டணி கணக்குகள் இறுதி வடிவம் பெறும் போது தான் எப்படி களம் இருக்கப்போகிறது என்பதை தீர்மானிக்க செய்யமுடியும்.
இந்த சூழலில், விஜய்க்கு ஏற்பட்டிருக்கும் எதிர்பார்ப்பு குறித்த செய்தியாளர்களின் கேள்விக்கு அமமுக பொது செயலாளர் டிடிவி தினகரன் பதிலளித்துள்ளார். அவர் கூறும் போது, “மறைந்த புரட்சிக் கலைஞர் விஜயகாந்த் 2006ம் ஆண்டு தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்தினாரோ அதேபோல் விஜய் 2026ம் ஆண்டு தேர்தலில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துவார் என கருதுகிறேன். அனைத்து கட்சிகளுக்கும் பாதிப்பை உருவாக்கலாம் என்று நினைக்கிறேன். நான் சொல்வது எதார்த்தம். அதற்காக கூட்டணி போகிறேன் என்று நினைக்க வேண்டாம். நான் எதார்த்தத்தை பேசுபவன். நான் கேள்விப்பட்டதை சொல்கிறேன். பட இடங்களில் சர்வே எடுப்பவர்கள், ஊடகவியலாளர்கள் சொல்வதைப் பார்த்தால் 2006ம் ஆண்டு தேர்தல் போல தவெக இந்த முறை தாக்கத்தை உண்டாக்கலாம் என நான் நினைக்கிறேன். டிசம்பர் மாதத்தில் எங்களது கூட்டணி இறுதி வடிவம் பெறும்” என்று கூறியுள்ளார். இவர் இப்படி பேசிவந்தாலும் தவெக-வுடனான கூட்டணிக்கு அடிபோடுகிறாரோ என்ற சந்தேகம் வலுப்பதாகவே ஒரு தரப்பினர் கருதுகின்றனர்