மத்திய கிழக்கில் ஏற்கனவே நிலவி வரும் அமெரிக்கா – ஈரான் இடையிலான போர், தற்போது ஒரு புதிய மற்றும் ஆபத்தான கட்டத்தை எட்டியுள்ளது. அமெரிக்கா தனது தரைப்படைத் தாக்குதலைத் தொடங்கினால், மத்திய கிழக்கின் மிக முக்கியமான வர்த்தக மையங்களான ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் பஹ்ரைன் ஆகிய நாடுகள் ஈரானின் தாக்குதலுக்கு ஆளாக நேரிடும் என்று ஈரான் பகிரங்கமாக எச்சரித்துள்ளது. அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்பிற்கு ஈரான் அனுப்பியுள்ள இந்தச் செய்தி, அந்தப் பிராந்தியத்தில் பதற்றத்தை உச்சத்திற்குக் கொண்டு சென்றுள்ளது.
இந்த மிரட்டலுடன் ஈரான், “விளையாட்டின் மூன்று விதிகளை” (Rules of the game) வாஷிங்டனிடம் முன்வைத்துள்ளது. முதலாவதாக, அமெரிக்கா தரைவழித் தாக்குதலை நடத்தினால், அமீரகமும் பஹ்ரைனும் ஈரானின் நேரடி இலக்குகளாக மாறும். இரண்டாவதாக, ஈரானின் உள்கட்டமைப்புகளைத் தாக்கினால், மத்திய கிழக்கு பிராந்தியம் முழுவதிலும் உள்ள மின்சாரம் மற்றும் எண்ணெய் நிறுவனங்கள் பெரும் ஆபத்தைச் சந்திக்கும்.
மூன்றாவதாக, ஈரானியத் தலைவர்கள் மீது தாக்குதல் அல்லது படுகொலை முயற்சியில் ஈடுபட்டால், அதற்குப் பழிவாங்கும் நடவடிக்கை மிகக் கடுமையாக இருக்கும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது. துபாய் ஏன் இப்போது குறிவைக்கப்படுகிறது என்பதுதான் உலக நாடுகளின் கேள்வியாக உள்ளது. துபாய் மத்திய கிழக்கின் மிக முக்கியமான வர்த்தக மற்றும் ராணுவக் கேந்திரமாகச் செயல்படுவதாலும், அங்குள்ள உள்கட்டமைப்புகள் மற்றும் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள் பிராந்தியத்தின் பொருளாதாரத்திற்கு ஆதாரமாக இருப்பதாலும் ஈரான் இந்த வியூகத்தைக் கையாள்கிறது.
ஏற்கனவே ஹார்முஸ் ஜலசந்தியை ஈரான் முடக்கி வைத்துள்ள நிலையில், அமெரிக்காவின் போர் நடவடிக்கைகளுக்கு அமீரகம் மற்றும் பஹ்ரைன் ஆதரவு அளித்தால், அந்த நாடுகளும் போரின் சுமையைச் சுமக்க வேண்டியிருக்கும் என்பதை ஈரான் இதன் மூலம் உணர்த்துகிறது. ஈரானின் இந்த எச்சரிக்கை வெறுமனே வார்த்தைகளுடன் நின்றுவிடவில்லை.
ஈரானியப் புரட்சிகர பாதுகாப்புப் படையினர், ஹார்முஸ் ஜலசந்தியில் சரக்குக் கப்பல்களைத் தொடர்ந்து சிறைபிடித்து, அது தொடர்பான வீடியோக்களையும் வெளியிட்டு வருகின்றனர். அமெரிக்காவின் பொருளாதாரத் தடைகளும், ட்ரம்பின் அதிரடி ராணுவ நடவடிக்கைகளும் ஈரானை இக்கட்டான நிலைக்குத் தள்ளியிருந்தாலும், விட்டுக்கொடுக்கத் தயாராக இல்லை என்பதை ஈரான் இந்த எச்சரிக்கை மூலம் உறுதி செய்துள்ளது. வளைகுடா நாடுகளில் அமெரிக்கப் படைகள் குவிக்கப்பட்டுள்ள சூழலில், ஈரானின் இந்த மிரட்டல் மத்தி கிழக்கில் போர் மேகங்களை மேலும் அடர்த்தியாக்கியுள்ளது.
