மத்திய கிழக்கு நாடுகளில் பதட்டம் தணியவில்லை. காசாவைத் தொடர்ந்து, இஸ்ரேல் இப்போது தனது கவனத்தை ஏமன் பக்கம் திருப்பியுள்ளது. ஏமனில் செயல்பட்டு வரும் ஹவுத்தி கிளர்ச்சியாளர்களின் இலக்குகள் மீது, இஸ்ரேல் ஒரு பயங்கரமான வான்வழித் தாக்குதலை நடத்தியுள்ளது.
“எங்களைத் தாக்குபவர்களை விடமாட்டோம்” என்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு விடுத்துள்ள நேரடி எச்சரிக்கை, இந்தப் பிராந்தியத்தில் ஒரு புதிய போருக்கு வழிவகுக்குமோ என்ற அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.செவ்வாய்க்கிழமை இரவு, இஸ்ரேலிய விமானப்படை, ஏமன் தலைநகர் சனா மற்றும் வடக்கு ஏமனில் உள்ள அல் ஜாஃப் மாகாணத்தில் உள்ள ஹவுத்தி கிளர்ச்சியாளர்களின் பல முக்கிய இலக்குகள் மீது குண்டு மழை பொழிந்தது.
இந்தத் தாக்குதல், வெறும் சாதாரண தாக்குதல் அல்ல. இது ஒரு மிக நீண்ட தூர, திட்டமிடப்பட்ட ஆபரேஷன். இஸ்ரேலிலிருந்து சுமார் 2,350 கிலோமீட்டருக்கும் அதிகமான தூரம் பயணித்து, இந்தத் தாக்குதலை இஸ்ரேல் நடத்தியுள்ளது. பத்துக்கும் மேற்பட்ட போர் விமானங்கள், நடுவானில் பலமுறை எரிபொருள் நிரப்பிக்கொண்டு, முப்பதுக்கும் மேற்பட்ட குண்டுகளை வீசியுள்ளன.
இது, ஹவுத்திகளின் சமீபத்திய தாக்குதல்களுக்கு ஒரு நேரடிப் பதிலடி.சுமார் இரண்டு வாரங்களுக்கு முன்பு, இஸ்ரேல் நடத்திய ஒரு தாக்குதலில், ஹவுத்திகளின் பிரதமர் அகமது அல்-ரஹாவி கொல்லப்பட்டார்.இதற்குப் பழிவாங்கும் விதமாக, ஹவுத்திகள், இந்த வார தொடக்கத்தில், தெற்கு இஸ்ரேலில் உள்ள ரமோன் விமான நிலையம் மீது ஒரு ட்ரோன் தாக்குதலை நடத்தினர்.
இந்த ட்ரோன் தாக்குதலுக்குப் பதிலடியாகத்தான், இஸ்ரேல் இப்போது இந்த மெகா வான்வழித் தாக்குதலை நடத்தியுள்ளது.இந்தத் தாக்குதலுக்குப் பிறகு, இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, மிகக் கடுமையான ஒரு எச்சரிக்கையை விடுத்துள்ளார்.
அவர், “சில நாட்களுக்கு முன்பு, ஹவுத்தி பயங்கரவாத அரசாங்கத்தின் பல உறுப்பினர்களை நாங்கள் அழித்தோம். அதற்கு அவர்கள் பதிலடி கொடுத்தார்கள். இன்று, நாங்கள் மீண்டும் அவர்களைத் தாக்கியுள்ளோம். நாங்கள் தொடர்ந்து தாக்குவோம். எங்களைத் தாக்குபவர் யாராக இருந்தாலும், நாங்கள் அவர்களைத் தேடிச் சென்று தாக்குவோம்,” என்று கூறியுள்ளார்.
இஸ்ரேல் ராணுவம் வெளியிட்டுள்ள தகவலின்படி,
ஹவுத்திகளின் ராணுவ முகாம்கள்,அவர்களின் எரிபொருள் கிடங்குகள் மற்றும், ஹவுத்தி தலைவர்களின் பேச்சுகளை ஒளிபரப்பும் பிரச்சார மையங்கள் ஆகியவை தாக்கி அழிக்கப்பட்டுள்ளன.இஸ்ரேல்-ஹமாஸ் போர் தொடங்கியதிலிருந்து, ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள், பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக, இஸ்ரேல் மற்றும் செங்கடல் பகுதியில் உள்ள கப்பல்கள் மீது தொடர்ந்து தாக்குதல்களை நடத்தி வருகின்றனர். இப்போது, இஸ்ரேல் நேரடியாக ஏமனுக்குள் நுழைந்து தாக்குதல் நடத்தியிருப்பது, இந்த மோதலை ஒரு புதிய, அபாயகரமான கட்டத்திற்கு எடுத்துச் சென்றுள்ளது.
