உலக அரசியலில் ஒரு மாபெரும் திருப்பம்! அமைதிக்கான நோபல் பரிசு கைநழுவிப் போனாலும், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்புக்கு இஸ்ரேல் தனது நாட்டின் மிக உயரிய விருதான ‘இஸ்ரேலிய ஜனாதிபதி பதக்கத்தை’ வழங்கி கௌரவிக்கப் போவதாக அறிவித்துள்ளது.
எதற்காக இந்த திடீர் விருது?
காஸாவில் இரண்டு ஆண்டுகளாக நீடித்த போரில், பிணைக்கைதிகளாக சிக்கியிருந்தவர்களை விடுவிப்பதற்கும், அமைதிப் பேச்சுவார்த்தைக்கும் டிரம்ப் எடுத்த முயற்சிகளைப் பாராட்டி இந்த விருது வழங்கப்படுவதாக இஸ்ரேல் அதிபர் ஐசக் ஹெர்சாக் அறிவித்துள்ளார்.
“டிரம்பின் அயராத உழைப்புதான், எங்கள் மக்களை வீட்டிற்கு அழைத்து வந்தது. மத்திய கிழக்கில் ஒரு அமைதியான எதிர்காலத்திற்கு அவர்தான் அஸ்திவாரம் போட்டிருக்கிறார்,” என்று இஸ்ரேல் அதிபர் அலுவலகம் பெருமிதத்துடன் தெரிவித்துள்ளது.
இது சாதாரண விருது இல்லை. ஒரு நாட்டுக்காகவோ அல்லது மனித குலத்திற்கோ மிகப்பெரிய பங்களிப்பைச் செய்பவர்களுக்கு மட்டுமே இந்த விருது வழங்கப்படும். இதற்கு முன், 2013-ல் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா இந்த விருதைப் பெற்றுள்ளார்.
தற்போது இஸ்ரேலுக்கு பயணம் மேற்கொள்ளும் டிரம்ப், அங்குள்ள நாடாளுமன்றத்தில் உரையாற்றுகிறார். மேலும், போரினால் பாதிக்கப்பட்ட பணயக்கைதிகளின் குடும்பத்தினரையும் நேரில் சந்திக்க இருக்கிறார்.
டிரம்ப் முன்மொழிந்த 20 அம்ச அமைதித் திட்டம்தான், 67,000 உயிர்களைப் பறித்த அந்தப் போரை முடிவுக்குக் கொண்டுவர ஒரு முக்கிய காரணமாக அமைந்துள்ளது என்று கூறப்படுகிறது.
நோபல் பரிசு கிடைக்காத நிலையில், இஸ்ரேல் வழங்கும் இந்த மிகப்பெரிய கௌரவம், உலக அரங்கில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
