இன்னும் கூட இஸ்ரேலை தனி நாடாக பாகிஸ்தான் அங்கீகரிக்கவில்லை. இருநாடுகளுக்கும் தூதரக உறவுகள் இல்லாததால் பதற்றம் அதிகரித்துள்ளது. சமீபத்தில் பாகிஸ்தான் பிரதிநிதி அசீம் இப்திகார், ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் இஸ்ரேலை கண்டித்து பேசியார். அவர், கத்தார் மீது நடத்திய தாக்குதல் சட்டவிரோதமானது என்றும், பாலஸ்தீனின் காசா, சிரியா, லெபனான், ஈரான், ஏமன் போன்ற நாடுகள் மீதும் இஸ்ரேல் அடாவடியான தாக்குதல்கள் நடத்தியதாக குற்றம் சாட்டினார்.
இதற்கு பதிலளித்த இஸ்ரேல் பிரதிநிதி டேனி டானன், பாகிஸ்தான் பயங்கரவாதிகளுக்கு அடைக்கலம் அளித்து வந்த வரலாற்றை வெளிப்படுத்தினார். குறிப்பாக அல்குவைதா தலைவர் ஒசாமா பின்லேடன் பாகிஸ்தானில் பதுங்கி இருந்ததே பாகிஸ்தானின் இரட்டை நிலைப்பாட்டுக்கான சான்று என்று சுட்டிக்காட்டினார். எந்த நாடும் பயங்கரவாதிகளுக்கு ஆதரவு தரக்கூடாது என்ற ஐநா விதியை பாகிஸ்தான் மீறுவதாக அவர் குற்றம்சாட்டினார்.
இந்த வார்த்தை மோதலால், இஸ்ரேல்–பாகிஸ்தான் இடையிலான உறவு மேலும் மோசமடைந்துள்ளது. ஏற்கனவே பாகிஸ்தான், தனது குடிமக்கள் இஸ்ரேலுக்கு செல்லக்கூடாது எனத் தடை விதித்துள்ளது. பாஸ்போர்ட்டுகளிலும் “இஸ்ரேலை தவிர” என்ற குறிப்பு இடம்பெற்றுள்ளது. இப்படியாக நல்லுறவு இல்லாத சூழலில், இஸ்ரேலின் அடுத்த குறி பாகிஸ்தானாக இருக்கக்கூடும் என்ற கருத்து பரவியுள்ளது.
தற்போது இஸ்ரேல் ஒரே நேரத்தில் காசா, லெபனான், ஈரான், கத்தார் ஆகிய நாடுகளின் சவால்களை சமாளித்து வருகிறது. இதனுடன் பாகிஸ்தானின் கண்டனமும் சேர்ந்து, இருநாடுகளுக்கிடையேயான பதற்றத்தை தீவிரப்படுத்தியுள்ளது. அரசியல் வட்டாரங்கள், பயங்கரவாத ஆதரவை வெளிப்படையாக வழங்கும் பாகிஸ்தான், இஸ்ரேலின் அடுத்த இலக்காக மாறக்கூடும் எனக் கூறுவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
