உலகின் முதல் செயற்கை கருவை உருவாக்கிய விஞ்ஞானிகள்

374
Advertisement

குழந்தை கருவாக இருக்கும் போது, தாயின் கருப்பையில் உருவாகும் குருத்தணுக்கள் என அழைக்கப்படும் ஸ்டெம்செல்களில் இருந்து தான் உடலின் அனைத்து உறுப்புகளும் உருவாகின்றன.

நமது உடலின் ரத்தம், எலும்பு மஜ்ஜை, தசை, தோல், மூளை, கொழுப்புத் திசு, கல்லீரல், கணையம் போன்றவற்றில் அதிக பங்கு வகிப்பதே இந்த ஸ்டெம்செல்கள் தான்.

அறிவியல் ஆராய்ச்சியில் அடுத்த கட்டத்துக்கு நகர்ந்துள்ள மருத்துவத் துறையில் ஸ்டெம்செல் பல நோய்களுக்கு தீர்வாக செயல்படலாம் என கருதப்படுகிறது. 

எந்த உறுப்பில் செலுத்தப்படுகிறதோ அந்த உறுப்பாகவே மாறும் தன்மையை ஸ்டெம்செல் கொண்டிருப்பது தான் இதற்கு காரணம்.

இந்நிலையில், இஸ்ரேலைச் சேர்ந்த வீஸ்மேன் (Weizmann) அறிவியல் நிறுவன விஞ்ஞானிகள் உலகிலேயே முதல் முறையாக விந்தணுவும் கருமுட்டையும் இல்லாமல் ஸ்டெம்செல்களை வைத்து செயற்கை கருவை உருவாக்கியுள்ளனர்.

பல வருடங்களாக சேமித்து வைக்கப்பட்டிருந்த எலிகளின் ஸ்டெம்செல்களில் நடத்தப்பட்ட இந்த சோதனையில் திருப்திகரமான விளைவுகள் கிடைத்துள்ளதாக கூறும் ஆராய்ச்சியாளர்கள், சோதனையின் எட்டாவது நாளில் இரத்த ஓட்டத்துடன் இதயத் துடிப்பு, மூளை மடிப்புகள், நரம்பு குழாய் மற்றும் குடல் பாதை உருவாகி இருப்பதாக தெரிவித்துள்ளனர்.

மரபியல் வழியான கருவுக்கும் செயற்கை கருவுக்கும் 95 சதவீத ஒற்றுமை இருப்பதாக தெரியவந்துள்ள நிலையில், இந்த ஆராய்ச்சி மருத்துவ அறிவியல் வளர்ச்சியில் முக்கிய மைல்கல்லாக பார்க்கப்படுகிறது.