இஸ்ரேல் – ஈரான் போர் : இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை உயரும் அபாயம்

இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா இணைந்து ஈரான் மீது அதிரடி தாக்குதல் நடத்தி வருகிறது. ஈரானின் அணு சக்தி மையங்கள், அணு சக்தி உள்கட்டமைப்புகள் மற்றும் ராணுவ தளங்கள் உள்ளிட்ட பல முக்கிய இடங்கள் குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது.

இந்த தாக்குதலில் ஈரான் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி, அவரது குடும்பத்தினர், பாதுகாப்புத்துறை அமைச்சர் அமீர், புரட்சிப்படை தளபதி முகமது உள்ளிட்ட பலர் உயிரிழந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த தாக்குதலுக்கு பதிலடி அளிக்கும் வகையில், ஈரான் இஸ்ரேல் மற்றும் மத்திய கிழக்கில் அமெரிக்க படைத்தளங்கள் அமைந்துள்ள நாடுகளை குறிவைத்து தாக்குதல் நடத்தி வருவதாக கூறப்படுகிறது. இதனால் மத்திய கிழக்கில் கடும் பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது.

உலகளவில் 20 முதல் 30 சதவிகித கச்சா எண்ணெய் ஏற்றுமதி ஹார்முஸ் ஜலசந்தி வழியாக நடைபெறுகிறது. இந்த கடல் வழித்தடம் உலகின் மிக முக்கியமான கச்சா எண்ணெய் போக்குவரத்து பாதையாகக் கருதப்படுகிறது.

தங்களுக்கு எதிராக தாக்குதல் நடத்தப்பட்டால், ஹார்முஸ் ஜலசந்தியை மூடி விடுவோம் என ஈரான் பல ஆண்டுகளாக எச்சரித்து வந்துள்ளது. தற்போதைய சூழலில், அந்த வழித்தடம் மூடப்பட்டதாக கூறப்படும் நிலையில், இதுகுறித்து ஈரான் தரப்பில் இருந்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை.

ஹார்முஸ் ஜலசந்தி மூடப்பட்டால், அதன் தாக்கம் உலகளாவிய பொருளாதாரத்திலும் உணரப்படும். குறிப்பாக இந்தியா போன்ற நாடுகளில் பெட்ரோல், டீசல் விலை உயர்வதற்கான வாய்ப்பு உள்ளது. ஏனெனில், இந்தியா தனது கச்சா எண்ணெய் தேவையின் 80 முதல் 90 சதவிகிதத்தை இறக்குமதி மூலம் பூர்த்தி செய்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Related News

Latest News