புதுச்சேரியில் நடைபெற்ற தவெக கூட்டத்தில் கவனம் பெற்ற லஞ்ச ஒழிப்புத் துறை எஸ்எஸ்பி இஷா சிங், தற்போது டெல்லிக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
2021 ஆம் ஆண்டு ஐபிஎஸ் பேட்ச்சை சேர்ந்த இவர், 2024 ஆம் ஆண்டு முதல் புதுச்சேரியில் பணியாற்றி வந்தார். கரூரில் நடைபெற்ற தவெக கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த சம்பவத்திற்குப் பிறகு, கடந்த டிசம்பர் மாதம் முதல்முறையாக புதுச்சேரியில் திறந்தவெளி பொதுக்கூட்டத்தில் அக்கட்சியின் தலைவர் விஜய் கலந்து கொண்டார். இந்த கூட்டம் புதுச்சேரி உப்பளம் துறைமுக அரங்கில் நடைபெற்றது.
இந்த தவெக பொதுக்கூட்டத்திற்கு கடுமையான பாதுகாப்பு மற்றும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தன. முன்பே பாஸ் வழங்கப்பட்ட 5,000 பேருக்கு மட்டுமே காவல்துறையினர் உள்ளே அனுமதி அளித்தனர். இந்த கூட்டத்தின் பாதுகாப்பு ஏற்பாடுகளை நேரடியாக கண்காணித்த புதுச்சேரி எஸ்எஸ்பி இஷா சிங், அரங்கின் நுழைவு வாயிலிலேயே நின்று முழு கூட்டத்தையும் திறம்பட கையாண்டார்.
பாஸ் இல்லாதவர்களை உள்ளே அனுமதிக்க முயன்ற தவெக பொதுச் செயலர் உள்ளிட்ட நிர்வாகிகளை அவர் கடிந்துகொண்ட காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவியது. இருப்பினும், பெரிய விபத்திற்குப் பிறகு நடைபெற்ற இந்த புதுச்சேரி கூட்டத்தில் எந்தவித அசம்பாவிதமும் ஏற்படாமல் சிறப்பாக பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்ததற்காக, இஷா சிங் அனைத்து தரப்பினரின் பாராட்டுகளையும் பெற்றார்.
புதுச்சேரி உள்துறை அமைச்சர் நமச்சிவாயம், இஷா சிங்கை நேரில் அழைத்து பாராட்டுத் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
