சென்னை காந்தி மண்டபத்தில் உள்ள காந்தி சிலைக்கு தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் இன்று மரியாதை செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர் கூறியதாவது:-
கரூரில் தவெக தலைவர் விஜய்யின் பரப்புரையின்போது மின் தடையை ஏற்படுத்தியது யார்? கூட்டத்தின் நடுவே செருப்பை வீசியது யார்? இந்த சம்பவத்தின்போது போலீசார் என்ன செய்து கொண்டிருந்தனர்? தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள் கேட்ட இடத்தில் மாவட்ட நிர்வாகம் ஏன் அனுமதி வழங்கவில்லை?
முதல்-அமைச்சர் வரும்போது மட்டும் ரவுண்டானா போன்ற பெரிய இடங்களில் அனுமதி கொடுக்கிறார்கள். இதையெல்லாம் அவர்கள் சீர்தூக்கி பார்க்க வேண்டும். தனிநபர் ஆணையம் விசாரணை செய்து கொண்டிருக்கும்போது அரசு அதிகாரிகள், சட்டமன்ற உறுப்பினர்கள் செய்தியாளர்களை சந்திப்பது தவறு.
பாஜக எங்களுடைய கொள்கை எதிரி என்று விஜய் சொல்லிக்கொண்டு இருக்கிறார். அப்படி இருக்கும்போது அவர் எப்படி பாஜகவின் பிடியில் இருப்பார்? இவ்வாறு அவர் கூறினார்.