தங்கம் மற்றும் வெள்ளி விலை கடந்த ஒரு ஆண்டில் நினைத்து பார்க்க முடியாத அளவுக்கு உயர்ந்த நிலையில், தற்போது பிற உலோகங்களின் விலையும் கூடியுள்ளது. குறிப்பாக செப்டம்பர் மாதத்திலேயே காப்பர் விலை சுமார் 6% அதிகரித்து, முதலீட்டாளர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
உலகளாவிய எரிசக்தி மாற்றத்தால் ஏற்பட்ட அதிகமான தேவை, இறுக்கமான விநியோகம் ஆகியவை காப்பர் விலை உயர்வுக்கான முக்கிய காரணங்களாகக் கூறப்படுகின்றன. சர்வதேச அளவில் சுரங்கங்களில் இருந்து வரும் காப்பர் விநியோகம் 4% பங்கைக் கொண்டிருந்த நிலையில், இந்தோனேசியாவின் ஃப்ரீபோர்ட்டின் கிராஸ்பெர்க் சுரங்கத்தில் ஏற்பட்ட சிக்கலின் காரணமாக, 2025 உற்பத்தியில் இருந்து சுமார் 2.5 லட்சம் டன்கள் குறைக்கப்பட்டுள்ளன.
மேலும், சமூக அசாதாரண நிலை மற்றும் உள்ளூர் போராட்டங்களால் பெருவில் உள்ள ஹட்பே மினரல்ஸ் இன்க் நிறுவனத்தின் பதப்படுத்தும் ஆலையை செப்டம்பர் 23ஆம் தேதி தற்காலிகமாக மூட வேண்டிய நிலை ஏற்பட்டது. இந்த இடையூறு தற்காலிகமானது, உற்பத்தி வழிகாட்டுதலுக்கு பாதிப்பு ஏற்படுத்தாது என நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதே வேளை, சீனாவும் செப்டம்பர் தொடக்கத்தில் சுத்திகரிக்கப்பட்ட காப்பர் உற்பத்தியை 5% குறைத்தது. இதனால் சுமார் 5 லட்சம் டன் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. அதே சமயம், ஷாங்காய் ஃபியூச்சர்ஸ் எக்ஸ்சேஞ்சின் கிடங்குகளில் காப்பர் இருப்பு இந்த வாரம் 6.6% வீழ்ச்சி கண்டுள்ளது.
சீனாவின் இறக்குமதி தேவையை பிரதிபலிக்கும் யாங்ஷான் காப்பர் பிரீமியம், ஒரு டன்னுக்கு 53 அமெரிக்க டாலராக, ஒரு மாதக் குறைந்த நிலையை எட்டியுள்ளது. இந்த சூழ்நிலைகள் அனைத்தும் காப்பர் விலை உயர்வை மேலும் தூண்டியுள்ளது. இதனாலேயே காப்பர் தங்கம், வெள்ளிக்கே tough கொடுக்கும் நிலைமை உருவாகியுள்ளது.
இது ஒரு செய்தி மட்டுமே. பொதுமக்கள் இதை முதலீட்டுக்கான ஆலோசனையாக எடுத்துக்கொள்ள வேண்டாம் என கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.