நான்கு நீண்ட ஆண்டுகளாக ரத்தமும் சதையுமாக நடந்து கொண்டிருக்கும் ரஷ்யா – உக்ரைன் போர், ஒருவழியாக முடிவுக்கு வரப்போகிறது! உலகம் முழுவதும் எதிர்பார்த்துக் காத்திருந்த அந்த “நல்ல செய்தி” இதோ வந்துவிட்டது.
ரஷ்யா தரப்பிலிருந்து ஒரு முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் முன்னெடுத்துள்ள சமாதானத் திட்டத்திற்கு, பேச்சுவார்த்தைகள் மிகச் சுமுகமாக நடந்து வருவதாக மாஸ்கோ தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக பெர்லினில் நடந்த ரகசியக் கூட்டங்களைத் தொடர்ந்து, அமெரிக்காவின் மியாமி நகரில் அடுத்தகட்ட பேச்சுவார்த்தை நடந்துள்ளது. இதில் ட்ரம்ப்பின் மருமகன் ஜாரெட் குஷ்னர் மற்றும் சிறப்புத் தூதர் ஸ்டீவ் விட்காஃப் ஆகியோர், ரஷ்ய அதிபர் புதினின் பிரதிநிதியான கிரில் டிமிட்ரிவ் (Kirill Dmitriev) உடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். “பேச்சுவார்த்தை ஆக்கப்பூர்வமாக உள்ளது” என்று ரஷ்யா பாசிட்டிவ் சிக்னல் கொடுத்துள்ளது.
மறுபக்கம், உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியும் இதற்குப் பச்சைக் கொடி காட்டியுள்ளார். “அமெரிக்கா, ரஷ்யா மற்றும் உக்ரைன் ஆகிய மூன்று நாடுகளின் பாதுகாப்பு ஆலோசகர்களும் ஒரே மேஜையில் அமர்ந்து பேசுவதை நான் ஆதரிக்கிறேன்” என்று ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார்.
ஜெலன்ஸ்கி மேலும் சொல்லும்போது, “இந்தச் சந்திப்பின் மூலம் கைதிகள் பரிமாற்றம் நடந்தாலோ அல்லது வேறு ஏதேனும் நல்ல முடிவு எட்டப்பட்டாலோ, அதை நான் ஏற்றுக்கொள்வேன்” என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார். ஏற்கனவே துருக்கியில் நடந்த பேச்சுவார்த்தை மூலம் தான் பல ராணுவ வீரர்கள் விடுவிக்கப்பட்டனர் என்பதையும் அவர் நினைவு கூர்ந்தார்.
இருப்பினும், இன்னும் சில சிக்கல்கள் இருக்கத்தான் செய்கின்றன. குறிப்பாக, ரஷ்யா பிடித்த நிலப்பகுதிகள் யாருக்குச் சொந்தம்? ஜபோரிஜியா (Zaporizhzhia) அணுமின் நிலையத்தின் கட்டுப்பாடு யாருக்கு? போரினால் அழிந்த உக்ரைனை மீண்டும் கட்டியெழுப்பப் பணம் கொடுப்பது யார்? – இந்தக் கேள்விகளுக்கு இன்னும் விடை கிடைக்கவில்லை.
ஆனால், இத்தனை நாட்களாக எதிரும் புதிருமாக நின்றவர்கள், இப்போது அமெரிக்காவின் முயற்சியால் பேச்சுவார்த்தைக்கு வந்திருப்பதே போரை முடிப்பதற்கான முதல் வெற்றி என்று உலக நாடுகள் கருதுகின்றன!
