கடந்த சில நாட்களாக, மத்திய அரசு மற்றும் எஸ்.பி.ஐ. வங்கி இணைந்து ரூ.30 ஆயிரம் நிதி உதவி வழங்கும் திட்டம் ஒன்றை செயல்படுத்தி வருவதாக கூறி, சமூக வலைதளங்கள் மற்றும் வாட்ஸ்அப் மூலம் தகவல்கள் காட்டு தீயாக பரவி வருகின்றன.
குறிப்பாக, இந்திய கிரிக்கெட் வீரர் மகேந்திர சிங் தோனி புகைப்படத்தை பயன்படுத்தி, நம்பிக்கை அளிக்கும் வகையில் அந்த செய்தி வடிவமைக்கப்பட்டுள்ளது. நடப்பாண்டு முடிவடைய உள்ளதால், இந்த வாய்ப்பை தவற விடாமல் உடனடியாக பயன்பெற, கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து பதிவு செய்ய வேண்டும் என அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனால் பலர் ஏமாற்றமடைந்து, அந்த லிங்கை திறக்க முயற்சிப்பதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், இத்தகவல் முற்றிலும் போலியானது என்றும், அந்த லிங்க் இணைய மோசடிக்கு வழிவகுக்கும் என்றும் தமிழ்நாடு அரசின் தகவல் சரிபார்ப்பகமான Fact Check Unit தெளிவான விளக்கம் அளித்துள்ளது. மத்திய அரசு அல்லது எஸ்.பி.ஐ. வங்கி சார்பில் இவ்வாறான எந்தத் திட்டமும் தற்போது இல்லை என்றும், பொதுமக்கள் இதுபோன்ற செய்திகளை நம்ப வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், இதுபோன்ற மோசடி லிங்குகளை கிளிக் செய்வதன் மூலம் தனிப்பட்ட தகவல்கள், வங்கி விவரங்கள் திருடப்பட வாய்ப்பு உள்ளதாகவும் எச்சரிக்கப்பட்டுள்ளது. எனவே, சமூக வலைதளங்கள் மற்றும் செல்போன் மூலம் வரும் சந்தேகத்திற்கிடமான தகவல்களை சரிபார்க்காமல் பகிர வேண்டாம் என்றும் தமிழ்நாடு அரசு கேட்டுக் கொண்டுள்ளது.
பொதுமக்கள் அதிகாரப்பூர்வ அரசு இணையதளங்கள் மற்றும் அறிவிப்புகள் மூலம் மட்டுமே நலத்திட்ட தகவல்களை அறிந்து கொள்ள வேண்டும் என்றும், போலி செய்திகள் மற்றும் வதந்திகளை பரப்புவதை தவிர்க்க வேண்டும் என்றும் அரசு வலியுறுத்தியுள்ளது.
