500 ரூபாய் நோட்டுகள் மீண்டும் தடை செய்யப்படுமா என்ற கேள்வி சமீப நாட்களாக பரவலாக விவாதிக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக, மார்ச் 2026க்குள் ஏடிஎம்களில் இருந்து 500 ரூபாய் நோட்டுகள் வழங்கப்படாது என்றும், அவை செல்லாது என்றும் சமூக ஊடகங்களில் செய்திகள் வைரலாகி மக்களிடையே பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த காலங்களில் 500 ரூபாய் நோட்டுகள் தொடர்பாக பல வதந்திகள் பரவியுள்ளன. கடந்த ஆண்டு ஜூன் மாதத்தில் கூட, ஒரு யூடியூப் சேனல் மார்ச் 2026க்குள் 500 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று கூறும் வீடியோவை வெளியிட்டது. அந்த வீடியோ பெரும் அளவில் வைரலானதைத் தொடர்ந்து இந்த விவகாரம் குறித்து பரபரப்பு ஏற்பட்டது.
இந்த வதந்திகளுக்கு மத்திய அரசு அதிகாரப்பூர்வமாக விளக்கம் அளித்துள்ளது. அரசின் தகவல் மற்றும் ஒளிபரப்பு துறையின் கீழ் செயல்படும் PIB (Press Information Bureau) இந்த செய்திகளை முற்றிலும் பொய்யானவை என்று அறிவித்துள்ளது.
500 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று எந்த அறிவிப்பும் வெளியிடப்படவில்லை என்றும், இந்திய ரிசர்வ் வங்கி (RBI) இதுபோன்ற எந்த முடிவையும் எடுக்கவில்லை என்றும் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. சமூக ஊடக தளமான X (முன்னாள் ட்விட்டர்) மூலமாகவும் இந்த வதந்திகள் நிராகரிக்கப்பட்டுள்ளன.
தற்போது புழக்கத்தில் உள்ள 500 ரூபாய் நோட்டுகள் முழுமையாக செல்லுபடியாகும் என்றும், அவை சட்டப்பூர்வமான பணமாக தொடர்ந்து பயன்படுத்தலாம் என்றும் மத்திய அரசு உறுதி அளித்துள்ளது. மக்கள் தங்கள் அன்றாட வாங்கல் மற்றும் பணப் பரிவர்த்தனைகளில் 500 ரூபாய் நோட்டுகளை வழக்கம் போல பயன்படுத்தலாம். சரிபார்க்கப்படாத தகவல்களை மற்றவர்களுக்கு பகிர வேண்டாம் என்றும், போலி செய்திகள் சமூகத்தில் குழப்பத்தை ஏற்படுத்தும் என்றும் அரசு எச்சரித்துள்ளது.
எந்த தகவலையும் நம்புவதற்கு முன், அது ரிசர்வ் வங்கி அல்லது மத்திய அரசு போன்ற அதிகாரப்பூர்வ ஆதாரங்களிலிருந்து வந்ததா என்பதை சரிபார்ப்பது மிகவும் அவசியம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இணையத்தில் வரும் ஒவ்வொரு செய்தியையும் உண்மை என்று நம்பக் கூடாது என்றும், செய்திகளை பகிர்வதற்கு முன் இருமுறை யோசிக்க வேண்டும் என்றும் PIB அறிவுறுத்தியுள்ளது.
