சேகர்பாபுவின் பவர் குறைகிறதா? கொளத்தூரைத் தட்டிப் பறிக்கும் ஸ்டாலின்! அதிரடி பின்னணி!

தமிழக அரசியல் களத்தில், குறிப்பாகத் திமுகவின் கோட்டையாகக் கருதப்பட்ட சென்னையில் இந்த முறை ஏற்பட்ட தேர்தல் தோல்வி, கட்சிக்குள் ஒரு மிகப்பெரிய புயலைக் கிளப்பியுள்ளது.

சென்னை கொளத்தூர் தொகுதியில் போட்டியிட்டுத் தோல்வியடைந்த முன்னாள் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், இப்போது கட்சிக்குள் அதிரடியான மறுசீரமைப்பு நடவடிக்கைகளில் இறங்கியுள்ளார்.

இதில் மிக முக்கியமான நகர்வாக, கொளத்தூர் தொகுதியின் பொறுப்பை அமைச்சர் சேகர்பாபுவிடம் இருந்து பறிக்கத் திமுக தலைமை தீவிரமாகத் திட்டமிட்டு வருவது அறிவாலய வட்டாரத்தில் தீயாகப் பரவி வருகிறது.

சட்டமன்றத் தேர்தலில் சென்னையில் திமுக வெறும் இரண்டு தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றது. ஸ்டாலினின் இந்த வரலாற்றுத் தோல்விக்குச் சென்னை கிழக்கு மாவட்டச் செயலாளரான சேகர்பாபு மற்றும் மா. சுப்பிரமணியம் ஆகியோரே காரணம் என்று உடன்பிறப்புகள் மத்தியில் கடும் கொந்தளிப்பு நிலவியது.

இதன் எதிரொலியாகவே, கடந்த மூன்று மாதங்களாகச் சேகர்பாபு ஏற்பாடு செய்த பெரும்பாலான நிகழ்ச்சிகளை உதயநிதி ஸ்டாலின் தவிர்த்து வந்தார்.

சேகர்பாபு மீது எப்போது நடவடிக்கை எடுக்கப்படும் என்று காத்திருந்தவர்களுக்குப் பதிலளிக்கும் விதமாக, இப்போது மாவட்டங்களின் எண்ணிக்கை 77-லிருந்து 110-ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

இந்த மறுசீரமைப்பில் ஒரு மிகப்பெரிய ‘ட்விஸ்ட்’ உள்ளது. சென்னையில் மட்டும் திமுக இப்போது 10 மாவட்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. இதில் மிக முக்கியமாக, இதுவரை சேகர்பாபுவின் கட்டுப்பாட்டில் இருந்த துறைமுகம் மற்றும் கொளத்தூர் தொகுதிகள் தனித்தனி மாவட்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன.

இதன் மூலம், கொளத்தூர் தொகுதியைச் சேகர்பாபுவின் அதிகார வரம்பிலிருந்து அப்புறப்படுத்தி, புதிய மாவட்டச் செயலாளரின் கீழ் கொண்டுவர ஸ்டாலின் முடிவு செய்துள்ளார்.

ஸ்டாலினின் தோல்விக்குப் பொறுப்பேற்றுச் சேகர்பாபுவின் அதிகாரத்தைக் குறைக்க வேண்டும் என்ற குரல்களுக்குக் கிடைத்த வெற்றியாகவே இது பார்க்கப்படுகிறது.

மாவட்டச் செயலாளர்களுக்கான வயது வரம்பை 70-ஆக நிர்ணயித்திருப்பதும், பல சீனியர் நிர்வாகிகளுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கொளத்தூர் தொகுதியில் இழந்த செல்வாக்கை மீட்டெடுக்கவும், நிர்வாக ரீதியாகத் தவறுகளைச் சரிசெய்யவும் ஸ்டாலின் எடுத்துள்ள இந்த அதிரடி ஆக்ஷன், திமுகவின் மற்ற மாவட்டச் செயலாளர்களையும் கலக்கத்தில் ஆழ்த்தியுள்ளது.

தோல்விக்குக் காரணமானவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது நடவடிக்கை உறுதி என்பதை ஸ்டாலின் இந்த நகர்வின் மூலம் தெளிவுபடுத்தியுள்ளார்.

Related News

Latest News