ஆதரவு கிடைப்பது சந்தேகம்? வேறு வழியே இல்லை! MGR-ரின் யுக்தியை கையில் எடுத்த விஜய்! மே 7ல் நடக்கப்போகும் ட்விஸ்ட்?

தமிழக அரசியலில் இதுவரை இல்லாத அளவுக்கு கவனத்தை ஈர்த்திருப்பவர் தமிழக வெற்றி கழக தலைவர் நடிகர் விஜய். திரையுலகில் மிகப்பெரிய ரசிகர் ஆதரவை கொண்ட அவர், அரசியலிலும் அதே போன்று முன்னேறியுள்ளார். 2024-ல் தொடங்கப்பட்ட தமிழக வெற்றி கழகம், வெறும் இரண்டு ஆண்டுகளில் எதிர்கொண்ட 2026 சட்டமன்றத் தேர்தலில் 108 தொகுதிகளில் வெற்றி பெற்று முக்கிய அரசியல் சக்தியாக உருவெடுத்துள்ளது.


ஆனால் ஆட்சி அமைக்க தேவையான பெரும்பான்மை எண்ணிக்கைக்கு இன்னும் ஆதரவு தேவைப்படுவதால், தற்போதைய அரசியல் கணக்குகள் தீவிரமடைந்துள்ளன. இரண்டு தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ள விஜய், ஒன்றை ராஜினாமா செய்ய வேண்டிய நிலையில் இருப்பதால் த வெ க-வின் பலம் 107 ஆக குறைய வாய்ப்புள்ளது. இதனால் கூடுதல் எம்.எல்.ஏ ஆதரவை பெறும் முயற்சிகள் வேகமடைந்துள்ளன.


அரசியல் வட்டாரங்களில் வெளியாகும் தகவலின்படி, இந்திய தேசிய காங்கிரஸ் சார்பிலுள்ள சில உறுப்பினர்கள் ஆதரவு அளிக்கலாம் என்ற பேச்சு நிலவுகிறது. அதேசமயம் விடுதலை சிறுத்தைகள் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி போன்ற கட்சிகளுடனும் ஆலோசனைகள் நடைபெறுவதாக கூறப்படுகிறது.


கூட்டணி அரசியல் தோல்வியடைந்தாலும் விஜய்யின் அணியில் வேறொரு கணக்கு தயாராக இருப்பதாக கூறப்படுகிறது. அதாவது நம்பிக்கை வாக்கெடுப்பின் போது சில எம்.எல்.ஏ-க்கள் பங்கு பெறாவிட்டால், பெரும்பான்மைக்கான எண்ணிக்கை குறையும். 234 உறுப்பினர்கள் கொண்ட சட்டமன்றத்தில் 30-க்கும் மேற்பட்டோர் வாக்களிக்க வரவில்லை என்றால், பெரும்பான்மைக்கான இலக்கு 103 வரை குறையக்கூடும். இது தற்போதைய தவேக-வின் பலத்திற்கு நெருக்கத்தில் உள்ளது. இந்த யுக்தியும் அரசியல் வட்டாரங்களில் பரபரப்பாக ஆராயப்படுகிறது.


இந்நிலையில், இப்போது தமிழக அரசியலின் முழு நகர்வும் ஆளுநரின் அடுத்த கட்ட முடிவை பொறுத்தே இருக்கும். விஜய்யிடம் 118 எம்.எல்.ஏ-க்களின் ஆதரவுக் கடிதத்தைக் கேட்பாரா அல்லது நேரடியாக ஆட்சி அமைக்க அழைக்கப்பட்ட பின்னர் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த அனுமதிப்பாரா என்பதே மிகப்பெரிய கேள்வியாக எழுந்துள்ளது. விஜய்க்கு தற்போது முதலமைச்சர் பதவி கைக்கெட்டும் தூரத்தில் இருக்கிறது. மே 7-ஆம் தேதி பதவியேற்பு நடைபெறலாம் என்ற தகவல்கள் பரவினாலும், கூட்டணி கணக்குகளும் ஆதரவு அரசியலும் தான் இறுதி முடிவை தீர்மானிக்கும் காரணிகளாக இருக்கப்போகின்றன.

எம்ஜிஆர் போலவே விஜய் முடிவை எடுப்பாரா என்ற கேள்வி தலைதூக்குகிறது. தமிழக அரசியலில் அடுத்த ஒரு சில நாட்கள், அனல் பறக்கும் திருப்பங்களுடன் பரபரப்புக்கு பஞ்சம் இல்லாமல், பலவித அதிரடிகளுடன் நகரப்போகின்றன என்பது மட்டுமே உறுதி.

Related News

Latest News