‘ஆபரேஷன் சிந்தூர்’ பார்ட் – 2 நடக்கப்போகிறதா? பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறிய பகீர் தகவல்!

பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், “ஆபரேஷன் சிந்தூர்” மீண்டும் தொடங்கப்படுமா என்பது பாகிஸ்தானின் நடத்தையைப் பொறுத்து இருக்கும் என்று எச்சரித்துள்ளார். எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை இந்தியா ஒருபோதும் சகிக்காது என்றும் அவர் உறுதிபட தெரிவித்துள்ளார்.

வட ஆப்பிரிக்க நாடான மொராக்கோவில் இந்தியர்களைச் சந்தித்த அவர், ‘ஆபரேஷன் சிந்தூரின் 2-வது அல்லது 3-வது கட்டம் தேவைப்படுமா என்பது எங்களால் தீர்மானிக்க முடியாது. பாகிஸ்தான் பயங்கரவாதச் செயல்களில் ஈடுபட்டால், அதற்கு தகுந்த பதில் கிடைக்கும்’ என்றார்.

கடந்த ஏப்ரல் 22ம் தேதி பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இதை தொடர்ந்து, முப்படை தளபதிகள் மற்றும் பாதுகாப்புச் செயலருடன் ஆலோசனை நடந்தது. அப்போது, ‘அரசாங்கம் அனுமதி அளித்தால் நடவடிக்கைக்கு தயாரா’ என்ற கேள்விக்குத் தளபதிகள் உடனடியாக ‘முற்றிலும் தயாராக உள்ளோம்’ என பதிலளித்தனர். பின்னர் பிரதமர் மோடி முழு ஆதரவும் சுதந்திரமும் அளித்ததால், அடுத்த கட்ட நடவடிக்கை நடந்தது’ என்றும் அவர் நினைவுகூர்ந்தார்.

மேலும், பஹல்காம் தாக்குதலில் பயங்கரவாதிகள் மத அடிப்படையில் மக்களை கொன்றனர், ஆனால் இந்திய ஆயுதப்படைகள் ஒருபோதும் மத அடிப்படையில் வன்முறையை நடத்தவில்லை. மக்களை கொன்றவர்களை மட்டுமே இலக்காகக் கொண்டது எனவும் அவர் விளக்கமளித்தார்.

இந்நிலையில், மொராக்கோ பயணம் மேற்கொள்ளும் இந்தியாவின் முதல் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் என்பது குறிப்பிடத்தக்கது.

Related News

Latest News