ஈரான் போரின் தாக்கம் காரணமாக இந்தியாவில் எல்பிஜி விநியோகத்தில் சிக்கல்கள் ஏற்பட்டுள்ளன. இந்தியா தனது தேவையின் பெரும்பகுதியை வளைகுடா நாடுகளில் இருந்து இறக்குமதி செய்து வந்த நிலையில், பிப்ரவரி 28 முதல் தொடங்கிய போரால் எல்பிஜி மற்றும் கச்சா எண்ணெய் வரத்து பாதிக்கப்பட்டுள்ளது. இடைக்கிடையே சில கப்பல்களில் எல்பிஜி வந்தாலும், அது நாட்டின் மொத்த தேவையை பூர்த்தி செய்ய முடியவில்லை.
மத்திய அரசு அமெரிக்கா உள்ளிட்ட மாற்று நாடுகளிலிருந்து எல்பிஜி இறக்குமதி செய்ய முயற்சி மேற்கொண்டுள்ளது. இருந்தாலும், தட்டுப்பாடு காரணமாக வணிக பயன்பாட்டு சிலிண்டர்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. மே மாதம் முதல் விநியோகத்தில் கூடுதல் மாற்றங்கள் அமலுக்கு வரலாம்.
விலை உயர்வு தொடர்பாக, உலக சந்தை நிலவரத்தைப் பொறுத்து ஒவ்வொரு மாதமும் முதல் தேதியில் சிலிண்டர் விலை மாற்றப்படுகிறது. ஏப்ரல் மாதத்தில் வீட்டு பயன்பாட்டு சிலிண்டர் ரூ.60 உயர்ந்து, சென்னை பகுதியில் ரூ.928.50 ஆக உள்ளது. வணிக சிலிண்டர் ரூ.196 உயர்ந்து ரூ.2,246.50 ஆக உள்ளது. கச்சா எண்ணெய் விலை உயர்வால் மே மாதத்திலும் விலை அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது.
சிலிண்டர் முன்பதிவு விதிகளில் மாற்றம் செய்யப்பட்டு, நகர்ப்புறங்களில் 25 நாட்களுக்கு ஒருமுறை, கிராமப்புறங்களில் 45 நாட்களுக்கு ஒருமுறை மட்டுமே பதிவு செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மேலும், மே மாதம் முதல் ஓடிபி அடிப்படையிலான விநியோகம் முழுமையாக அமல்படுத்தப்படுகிறது.
கேஒய்சி நடைமுறையை முடிக்காதவர்களுக்கு சிலிண்டர் கிடைக்காமல் போகும் அபாயம் உள்ளது. தட்டுப்பாடு இன்னும் முழுமையாக நீங்கவில்லை என்றாலும், அரசு முக்கிய துறைகளுக்கு முன்னுரிமை வழங்கி விநியோகத்தை மேற்கொண்டு வருகிறது.
