தங்கம் வாங்க நேரம் வந்துடுச்சா? ஏறிய வேகத்தில் இறங்கி அதிரடி!

நவம்பர் மாதம் தொடங்கியதிலிருந்து தங்கம் விலையில் ஏற்றத்தாழ்வுகள் தொடர்ந்து பதிவாகி வருகின்றன. அக்டோபர் மாதத்தில் தங்கம் விலை வரலாறு காணாத அளவிற்கு உயர்ந்தது. தீபாவளி பண்டிகைக்கு முன்பு வரை விலை உயர்வில் இருந்த தங்கம், பண்டிகைக்கு பிறகு மெதுவாகக் குறையும் போக்கில் உள்ளது.

அந்த நிலையில், நவம்பர் 3 அதாவது நேற்று தங்கம் விலை மீண்டும் உயர்ந்தது. அப்போது ஒரு கிராம் தங்கம் ரூ.40 அதிகரித்து ரூ.11,350க்கும், ஒரு சவரன் ரூ.320 உயர்ந்து ரூ.90,800க்கும் விற்பனை செய்யப்பட்டது. ஆனால் இன்று காலை தங்கம் விலை திடீரெனக் குறைந்துள்ளது. இதனால் நகை பிரியர்கள் பெரும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

இன்று 22 காரட் தங்கம் கிராமுக்கு ரூ.100 குறைந்து ரூ.11,250க்கும், ஒரு சவரன் ரூ.800 குறைந்து ரூ.90,000க்கும் விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல், 18 காரட் தங்கம் விலை கிராமுக்கு ரூ.85 குறைந்து ரூ.9,390க்கும், ஒரு சவரன் ரூ.680 குறைந்து ரூ.75,120க்கும் விற்கப்படுகிறது.

வெள்ளி விலையும் சிறிய அளவில் குறைந்துள்ளது. தற்போது ஒரு கிராம் வெள்ளி ரூ.3 குறைந்து ரூ.165க்கும், ஒரு கிலோ ரூ.1,65,000க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலைச் சரிவு மற்றும் அமெரிக்க டாலர் மதிப்பில் ஏற்பட்ட மாற்றம் ஆகியவை, உள்ளூர் தங்க விலைகளிலும் தாக்கம் செலுத்தியுள்ளதாக நகை வியாபாரிகள் கூறுகின்றனர். தங்கம் விலை மேலும் குறைய வாய்ப்பு இருப்பதாகவும் வியாபார வட்டாரங்கள் கணிக்கின்றன.

Related News

Latest News