கட்சி தொடங்கி 3 வருடங்கள் முடிவதற்குள்ளேயே, ஒரு மாபெரும் வெற்றியை தமிழ்நாட்டில் சாத்தியமாக்கி இருக்கிறது விஜய்யின் தவெக. சட்டப்பேரவை தேர்தலில் முதன்முறையாக களம் கண்ட விஜயின் தமிழக வெற்றிக் கழகம் 108 இடங்களை கைப்பற்றியுள்ளது. திமுக கூட்டணி 73 இடங்களிலும் அதிமுக கூட்டணி 53 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளது.
விஜய் திருச்சி கிழக்கு, பெரம்பூர் என 2 தொகுதிகளில் வென்றுள்ளதால் ஏதேனும் ஒரு தொகுதியை ராஜினாமா செய்ய வேண்டிய நிலையில் இருக்கிறார். அத்துடன் தனி பெரும்பான்மையையும் அவர் நிரூபிக்க வேண்டும் என்பதால் தமிழக அரசியல் களத்தின் பரபரப்பு இன்னும் ஓயவில்லை.
இந்தநிலையில் சந்தித்த முதல் தேர்தலிலேயே விஜய்க்கு இவ்வளவு பெரிய வெற்றி கிடைத்ததற்கு, சமூக வலைதளமான இன்ஸ்டாகிராமே முழுமுதற்காரணமாகி இருக்கிறது. ‘பழைய கழிதலும் புதியன புகுதலும்’ என்ற நியதிப்படி, இந்த தேர்தலில் இன்ஸ்டாகிராம் ஏற்படுத்திய தாக்கம், தவெக கட்சியை வெறும் சினிமா ரசிகர்களின் கட்சியாக இல்லாமல், ஒரு தீவிரமான அரசியல் இயக்கமாக மாற்றி இன்று தனிப்பெரும் வெற்றியை சாத்தியமாக்கி இருக்கிறது.
இன்ஸ்டாகிராமை பயன்படுத்தும் ஒருவர் ஒருமுறை விஜய்யின் வீடியோவைப் பார்த்தால், இன்ஸ்டாகிராம் அல்காரிதம் (Algorithm) அவருக்குத் தொடர்ந்து தவெக தொடர்பான செய்திகளையே காட்டும். இது அக்கட்சிக்கு மட்டுமின்று எந்தக் கட்சிக்கும் பொருந்தும். ஆனால், இதை மிகச் சரியாக பயன்படுத்திக் கொண்டது தவெக மட்டுமே என்பதுதான் நிதர்சனம். ஆயிரம் போஸ்டர்கள் செய்யமுடியாத வேலையை ஒரே ஒரு 30 வினாடி ரீல்ஸ் வீடியோ செய்து விடும் என்ற உளவியலை, தவெக செவ்வனே பயன்படுத்திக் கொண்டது.
2வது முறையாக ஆட்சியை பிடிப்போம் என உறுதியாக இருந்த திமுக கோட்டை விட்டது இந்த இடத்தில் தான். இதனால் சமூக வலைதளங்களை வெறுமனே அரசியல் விவாதங்களுக்கும், நீண்ட அறிக்கைகளை வெளியிடுவதற்கும் மட்டுமே பயன்படுத்தாமல், இனிவரும் காலங்களில் இளம் தலைமுறையின் கவனத்தை ஈர்க்கக் கூடிய வகையில் பயன்படுத்தினால் மட்டுமே பெரிய கட்சிகளால் இளைஞர் வாக்குகளை வசப்படுத்த முடியும் என்ற நிலை உருவாகியுள்ளது.
