பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் அடிலா சிறையில் உயிருடன் இருப்பதாக கூறப்படுகிறது. மேலும் அவரை வெளிநாடு செல்ல அழுத்தம் தரப்படுவதாகவும் பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாப் கட்சியின் செனட் உறுப்பினர் குர்ராம் ஜீஷான் தெரிவித்துள்ளார்.
கடந்த வாரம் ஆப்கானிஸ்தானின் சமூக ஊடகங்களில், ராவல்பிண்டி சிறையில் இம்ரான் கான் கொல்லப்பட்டார் என்ற தகவல் பரவியது. அதேசமயம், கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக அவர் குடும்பத்தினரும், கட்சி தலைவர்களும் அவரை சந்திக்க அனுமதி மறுக்கப்பட்டதால், சந்தேகங்கள் அதிகரித்தன.
அவரது சகோதரிகள் சிறை வாசலில் போராட்டம் நடத்தியபோது, காவல்துறை தகராறு செய்தது. ‘இம்ரான் கான் உயிருடன் இருப்பதற்கான உறுதியான ஆதாரம் வெளியிடப்பட வேண்டும்’ என அவரது மகன் காஸிம் கான் கோரிக்கை விடுத்தார்.
இந்நிலையில், செனட்டர் குர்ராம் ஜீஷான் கூறியதாவது: ‘இம்ரான் கான் அடிலா சிறையில் பாதுகாப்பாக உள்ளார் என்று அரசு எங்களிடம் தெரிவித்துள்ளது. ஆனால் அவரை தனிமைச் சிறையில் அடைத்து, நாட்டை விட்டு வெளியேறி அமைதியாக வாழும் வகையில் அழுத்தம் கொடுத்துவருகின்றனர். இம்ரான் கான் அதற்கு சம்மதிக்கவில்லை,’ என்றார்.
அவரது பெரும் புகழ் காரணமாகவே அரசு அச்சத்தில், அவரது புதிய புகைப்படங்கள் அல்லது வீடியோக்கள் வெளியேற அனுமதிக்கப்படவில்லை என்றும் அவர் குற்றம்சாட்டினார். ஒரு மாதமாக குடும்பத்தினரைச் சந்திக்க விடாமல் தனிமைப்படுத்தி வைப்பது மனித உரிமை மீறல் என்றும் அவர் கூறினார்.
சிறையில் இருந்தாலும், இம்ரான் கானின் செல்வாக்கு இளைஞர்களிடையே அதிகரித்துக் கொண்டே போகிறது. PTI கட்சி வலுவான ஆதரவைப் பெற்றுள்ளதாகவும், இம்ரான் கானின் படம் வெளியானால் அது மக்களில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதால் அரசே அதை தடுத்து வருவதாகவும் ஜீஷான் தெரிவித்தார்.
