Friday, April 4, 2025

தங்கம் விலை தடாலடியாக 38 சதவீதம் குறைய போகிறதா? இது தான் அதற்கு காரணம்! வர்த்தக நிபுணர்கள் கணிப்பு!

உலக வர்த்தகம் ஒரு நேரம் போல இல்லை என்பதை சமீப நாட்களில் பார்க்க முடிகிறது. குறிப்பாக சர்வதேச அளவில் நடந்து வரும் மாற்றங்கள் காரணமாக தங்கத்தின் விலை உச்சத்தை அடைந்து மக்களை அலற விட்டது. ஆனால் இனி வரும் நாட்களில் 38% வரை விலை குறைய வாய்ப்பு இருப்பதாக சொல்லப்படுவது நடுத்தர மக்களுக்கு இதமான செய்தியாக இருக்கிறது. மார்னிங்ஸ்டார் நிறுவனத்தின் சந்தை நிபுணர் ஜான் மில்ஸ் இதனை தெரிவித்திருக்கிறார். ஒரு அவுன்ஸ் மூவாயிரம் டாலரிலிருந்து இருந்து ஆயிரத்து 820 டாலர் வரை குறையலாம் என்று அவர் கணித்திருப்பது மகிழ்ச்சியே.

மார்ச் 31ம் தேதி 24 கேரட் தங்கத்தின் விலை 10 கிராம் ரூ.89,510 ஆக விற்கப்பட்டது. இந்த விலை ரூ.55,496 ஆக குறையலாம் என கணிக்கப்பட்டிருப்பது உச்சி வெயில் சுட்டெரிக்கும்போது சாரல் மழை நனைத்ததை போல் குளிர்ச்சியான தகவலாகவே இருக்கிறது. இத்தனை நாட்களாக தங்கத்தின் விலை ஏறியதற்கு சில காரணங்கள் இருக்கின்றன. உலகளவில் நிலவிய பொருளாதார மந்தநிலை, பணவீக்கம், வர்த்தக ரீதியிலான நிச்சயமற்ற தன்மை ஆகியவை முதலீட்டாளர்களை தங்கத்தை நோக்கி படையெடுக்கவைத்தது.

மார்க்கெட்டில் எதற்கு தேவை அதிகமோ, அதன் விலை உயரும் என்பது பொதுவான விதி. அதாவது தங்கத்தின் மீது முதலீடு அதிகரித்ததால் அதன் விலையும் உயர்ந்ததை தொடர்ந்து உலகமே அமெரிக்க பொருளாதார சந்தையை அடிப்படையாக கொண்டுதான் செயல்பட்டு வருகிறது. ஆனால் அமெரிக்காவின் பொருளாதாரத்தில் டிரம்ப் வந்த பிறகு அத்திரி புதிரியான பல மாற்றங்கள் எற்பட்டிருக்கின்றன. இதுவும் தங்கம் விலை உயர்வுக்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது. டிரம்பின் வரி நடவடிக்கை கூட விலை உயர்வுக்கு காரணமாக அமைந்துவிட்டது.

ஆனால் இவையெல்லாம் நேற்றுவரை தான். தற்போது நிலைமை தலைகீழாய் மாறிவிட்டது. தங்கத்திற்கு அதிக டிமான்ட் இருப்பதை உணர்ந்து கொண்ட உற்பத்தியாளர்கள், அதை மேலும் அதிகமாக தோண்டி எடுக்க ஆரம்பித்துள்ள நிலையில் கடந்த ஆண்டில் தங்கம் தோண்டுவதால் ஒரு அவுன்ஸுக்கு 950 டாலர் வரை லாபம் கிடைத்ததாக கூறப்படுகிறது. எனவே இன்று பல நிறுவனங்கள் தங்கத்தை தோண்டி எடுக்க அணி திரண்டு வந்துவிட்டனர்.

எனவே தங்கத்துக்கான டிமான்ட் குறைய தொடங்கியுள்ளது. இந்த ஒன்று போதுமே விலை குறைய. முதலீட்டாளர்களும் கொஞ்ச காலத்தில் தங்கத்திற்கு மாற்றாக வேறு எதிலாவது முதலீடு செய்ய ஆர்வம் காட்டுவார்கள். இதனால் விலை சரசரவென குறையும் என்று வர்த்தக ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

இது ஒரு செய்தி மட்டுமே. இதை பொதுமக்கள் கண்டிப்பாக முதலீட்டுக்கான ஆலோசனையாக எடுத்துக்கொள்ள வேண்டாம் என்று கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

Latest news