சென்னை சூப்பர் கிங்ஸ் நடப்பு சாம்பியன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை, ஈடன் கார்டன் மைதானத்தில் மே 7ம் தேதி எதிர்கொள்கிறது. சென்னை Play Off ரேஸில் இருந்து வெளியேறி விட்டது. ஆனால் கொல்கத்தாவைப் பொறுத்தவரை ஏதேனும் மேஜிக் நடந்தால், அவர்கள் Play Offக்கு செல்ல வாய்ப்பிருக்கிறது.
பஞ்சாப்பிற்கு எதிராக சாம் கரணும், பெங்களூரு அணிக்கு எதிராக ஆயுஷ் மாத்ரேவும் அதிரடி காட்டி அசத்தினர். இதேபோல KKRக்கு எதிராகவும் CSK வீரர்களின், பேட்டிங் அதிரடி தொடரும் என எதிர்பார்க்கப் படுகிறது.
இந்தநிலையில் சென்னை கேப்டன் மகேந்திர சிங் தோனி, தொடர்ச்சியாக பயிற்சிகளை புறக்கணித்து ரசிகர்களின் நெஞ்சில் இடியை இறக்கியிருக்கிறார். கடந்த 2 நாட்களாக அவர் வலைப்பயிற்சியில் ஈடுபடவில்லை.
இதனால் தோனி தன்னுடைய ஓய்வை அறிவிக்கப் போவதாக, காட்டுத்தீ வேகத்தில் தகவல்கள் வேகமாகப் பரவி வருகின்றன. இந்தநிலையில் சென்னை அணியின் பவுலிங் பயிற்சியாளர் எரிக் சைமன்ஸ், இதற்கு விளக்கம் அளித்துள்ளார்.
இதுகுறித்த பேட்டியில், ” இருக்கும் இடத்திலேயே தன்னை தயார்படுத்திக் கொள்வது தோனியின் ஸ்பெஷல். இதனால் அவர்குறித்து கவலைப்பட தேவையில்லை. தோனி இப்போது விளையாடத் தயாராக இருக்கிறார்.
எப்போது ஆட்டத்தை நிறுத்த வேண்டும் என்பது அவருக்குத் தெரியும். நாம் இப்போது என்ன சூழ்நிலையில் இருக்கிறோம். ஆடுகளத்தின் நிலை என்ன என்பதை அவர் நன்கு அறிவார். 5 கோப்பைகளை வென்ற எங்களுக்கு, இந்த சீசன் மோசமானதாக அமைந்து விட்டது.
ஆனால் இதை வீரர்களின் திறமையை, அறியக் கிடைத்த வாய்ப்பாக நினைக்கிறோம். தோனி எங்களின் மிகப்பெரிய பலம். ஒவ்வொரு போட்டிக்கும் கடுமையாக உழைக்கிறார். இளம்வீரர்களின் திறமையை வளர்த்தெடுக்கிறார்.
களத்தில் வியூகங்கள் அமைப்பதில் அவரை யாரும் மிஞ்ச முடியாது. கொல்கத்தாவுக்கு எதிராக தோனி நிச்சயம் விளையாடுவார்,” என ரசிகர்களுக்கு ஆறுதல் அளித்துள்ளார். நடப்பு சாம்பியனை தோற்கடித்து, CSK வெற்றிப்பாதையில் அடியெடுத்து வைக்குமா?