இண்டியா கூட்டணியின் பின்னடைவுக்கு காரணமாக இருக்கிறதா காங்கிரஸ்? பீகார் முன்னிலை நிலவரம் சொல்வது என்ன?

பீகார் சட்டப்பேரவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடர்ந்து வெளியாகிக் கொண்டிருக்கும் நிலையில், தேசிய ஜனநாயகக் கூட்டணியான NDA வெற்றிக்குத் தேவையான 122 இடங்களை தாண்டி 191 இடங்களில் முன்னிலையில் இருப்பது அரசியல் வட்டாரங்களில் கவனத்தை ஈர்த்துள்ளது. அதே சமயம், மகாகட்பந்தன் கூட்டணி 49 இடங்களில் மட்டுமே முன்னிலை பெற்றிருப்பது அவர்களுக்கு பெரிய பின்னடைவை உருவாக்கியுள்ளது. தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகளை விட, நேரடி வாக்கு எண்ணிக்கை முடிவுகள் NDA-க்கே பெரும் ஆதரவாக இருக்கின்றன.

NDA-வின் கூட்டணி கட்சிகளான பாஜக மற்றும் ஐக்கிய ஜனதா தளத்தின் நிலை மேலும் வலிமையாக தெரிகிறது. பாஜக போட்டியிட்ட 101 இடங்களில் பெரும்பாலான இடங்களில் முன்னிலையில் உள்ளது. அதேபோல், ஜே.டி.யு போட்டியிட்ட 101 இடங்களில் 84 இடங்களில் முன்னிலை பெற்று, கூட்டணியின் பின்தளத்தை உறுதிப்படுத்தியுள்ளது. NDA-வின் இரு முக்கியக் கட்சிகளும் சக்திவாய்ந்த முடிவுகளைப் பதிவு செய்வது, ஆட்சியைத் தொடர்ந்து பிடிக்கும் சாத்தியத்தை அதிகரித்துள்ளது.

மற்றபுறம், மகா கட்பந்தனின் நிலைமை பலவீனமாகவே உள்ளது. 143 இடங்களில் களம் இறங்கிய ராஷ்டிரிய ஜனதா தளம் அதாவது RJD சொற்ப இடங்களில் மட்டுமே முன்னிலை வகிக்கிறது. அதன் கூட்டணிக் கட்சியான காங்கிரஸ், போட்டியிட்ட 61 இடங்களில் மிக சில இடங்களில் மட்டும் முன்னிலையில் உள்ளது என்பது கடுமையான பின்னடைவாக பார்க்கப்படுகிறது. இடதுசாரிகளும் போட்டியிட்ட 29 இடங்களில் மிகக் குறைந்த இடங்களில்தான் முன்னிலை பெற்றுள்ளனர்.

2020 தேர்தலில் RJD 75 இடங்களை வென்றிருந்தாலும், காங்கிரஸ் 19 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது. அதே போன்று, இந்த முறைவும் RJD கடுமையான போட்டி கொடுத்தாலும், காங்கிரஸின் மோசமான செயல்திறன் மகாகட்பந்தனின் வாய்ப்புகளை குறைத்துள்ளதாக அரசியல் ஆய்வாளர்கள் மதிப்பிடுகின்றனர்.

நிலைமை இப்படி இருக்க, மகாகட்பந்தனின் எதிர்பார்ப்பிற்கு பெரிய தடையாக காங்கிரஸ் செயல்பட்டிருக்கிறதா என்ற கேள்விக்கு இன்று பிற்பகல் முழு முடிவுகள் வெளிவரும்போது பதில் கிடைக்கும்.

Related News

Latest News