‘ஈரானிடம் இருக்கும் ஆயிரம் ஏவுகணைகள்’! அமெரிக்கா முகத்தில் கரியைப் பூசிய உளவுத்துறை!

அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே கடந்த ஏழு வாரங்களாக நடந்து வரும் போரில், அமெரிக்கா மிகப்பெரிய வெற்றி பெற்றுவிட்டதாக அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தொடர்ந்து முழங்கி வருகிறார். ஈரானின் விமானப்படை முழுமையாகத் துடைத்தெறியப்பட்டுவிட்டது என்றும், அந்நாட்டின் கடற்படை கடலின் அடியில் மூழ்கிவிட்டது என்றும் பென்டகன் அதிகாரிகள் மார்தட்டிக்கொண்டனர். ஆனால், தற்போது வெளியாகியுள்ள அமெரிக்க உளவுத்துறையின் ஒரு ரகசிய அறிக்கை, ட்ரம்ப்பின் இந்த வெற்றிக் கோஷங்களைத் தவிடு பொடியாக்கியுள்ளது.

ஈரானின் ராணுவ பலம் சிதைக்கப்பட்டுவிட்டதாகச் சொல்லப்பட்டாலும், நிஜத்தில் அந்த நாடு இன்னும் ஆயிரக்கணக்கான ஏவுகணைகளையும், தற்கொலைப்படை ட்ரோன்களையும் ரகசியமாகப் பாதுகாத்து வைத்திருப்பது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. அமெரிக்கப் பாதுகாப்பு உளவுத்துறை அமைப்பான டி.ஐ.ஏ-வின் (DIA) இயக்குனர் லெப்டினன்ட் ஜெனரல் ஜேம்ஸ் ஆடம்ஸ், அமெரிக்க நாடாளுமன்றக் குழுவிடம் அளித்துள்ள வாக்குமூலம் ஒட்டுமொத்த வெள்ளை மாளிகையையும் அதிர வைத்துள்ளது. ஈரானின் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் படைகள் ஆயிரக்கணக்கான ஏவுகணைகளை வீசித் தாக்குதல் நடத்தினாலும், ஈரானிடம் இன்னும் “ஆயிரக்கணக்கான” ஏவுகணைகள் மிச்சமிருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

‘ஆபரேஷன் எபிக் பியூரி’ மூலம் ஈரானின் 450 ஏவுகணைக் கிடங்குகளும், 800-க்கும் மேற்பட்ட ட்ரோன் தளங்களும் அழிக்கப்பட்டுவிட்டதாக ட்ரம்ப் கூறியிருந்த நிலையில், உளவுத்துறையின் இந்தத் தகவல் பெரும் முரணாகப் பார்க்கப்படுகிறது. சி.என்.என் (CNN) செய்தி நிறுவனம் நடத்திய ஆய்வின்படி, ஈரானின் ஏவுகணை செலுத்தும் வாகனங்களில் (Missile Launchers) சுமார் 50 சதவீதம் இன்னும் எவ்விதச் சேதமுமின்றி அப்படியே உள்ளன.

அதைவிட முக்கியமாக, ஹார்முஸ் ஜலசந்தி வழியாகச் செல்லும் கப்பல்களைக் குறிவைத்துத் தாக்கும் “கோஸ்டல் டிஃபென்ஸ்” (Coastal Defense) ஏவுகணைகள் பெரும்பாலானவை இன்னும் அழியவில்லை என்பதுதான் அமெரிக்காவிற்கு வந்துள்ள மிகப்பெரிய தலைவலி. அமெரிக்கா தனது வான்வழித் தாக்குதல்களை ஈரானின் உட்பகுதிகளில் மட்டுமே அதிக கவனம் செலுத்தியதால், கடற்கரை ஓரங்களில் உள்ள ஏவுகணைகள் தப்பித்துவிட்டதாகக் கூறப்படுகிறது.

இது வெறும் எண்ணிக்கை தொடர்பான விவகாரம் மட்டுமல்ல, ஈரானால் இன்னும் மத்திய கிழக்கு பிராந்தியத்தில் ஒரு மிகப்பெரிய பேரழிவை ஏற்படுத்த முடியும் என்பதற்கான சான்றாகும். ஈரானின் ஆயுதத் தொழிற்சாலைகள் தரைமட்டமாக்கப்பட்டுவிட்டன என்றும், இனி அவர்களால் ஆயுதங்களைத் தயாரிக்க முடியாது என்றும் ட்ரம்ப் போட்ட கணக்குத் தப்பாகிப் போயுள்ளதை இந்த உளவுத்துறை ரிப்போர்ட் உறுதிப்படுத்துகிறது. ஒருபுறம் அமைதிப் பேச்சுவார்த்தைகள் மற்றும் போர்நிறுத்த நீட்டிப்பு பற்றிப் பேசினாலும், ஈரானிடம் மிச்சமிருக்கும் இந்த அசுர பலம் மீண்டும் ஒரு கொடூரமான போருக்கு வழிவகுக்குமோ என்ற அச்சம் நிலவுகிறது.

Related News

Latest News