மத்திய கிழக்கு பிராந்தியத்தில் போர் நிறுத்தம் அமலில் இருந்தாலும், ஈரான் மற்றும் அமெரிக்கா இடையிலான கசப்பான மோதல் இன்னும் தணிந்தபாடில்லை. தற்போது ஈரானிய அதிபர் மசூத் பெசெஷ்கியன், அமெரிக்காவின் கடல் முற்றுகை நடவடிக்கையை மிகக் கடுமையாகச் சாடியுள்ளார். அமெரிக்கா ஈரானின் துறைமுகங்களைத் தனது கப்பல்கள் மூலம் முற்றுகையிட்டு வைத்திருப்பது, அமைதி முயற்சி அல்ல; மாறாக, அது போரின் நீட்சி என்று அவர் பகிரங்கமாகக் குற்றம் சாட்டியுள்ளார்.
ஈரானின் சுதந்திரத்திற்காகத் தாங்கள் கொடுத்துவரும் விலையைப் பற்றிக் குறிப்பிட்டுள்ள அவர், அமெரிக்காவின் இந்த நடவடிக்கை மீண்டும் ஒரு ராணுவ நடவடிக்கையின் தொடர்ச்சியாகவே பார்க்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். சமூக வலைதளப் பக்கமான ‘எக்ஸ்’ தளத்தில் தனது கண்டனத்தைப் பதிவு செய்துள்ள அதிபர் பெசெஷ்கியன், ஈரான் இதுவரை காட்டிய பொறுமை மற்றும் சமரச முயற்சிகளை உலகம் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறது என்று குறிப்பிட்டுள்ளார்.
துறைமுக முற்றுகை என்ற பெயரில் அமெரிக்கா செய்து வரும் இந்த செயல், ஈரானிய மக்களின் சுதந்திரத்தை நசுக்கும் முயற்சியாகவே பார்க்கப்படுகிறது. ஈரானின் இறையாண்மைக்கு எதிராக அமெரிக்கா எடுத்துள்ள இந்த “ஒடுக்குமுறைப் போக்கை” இனிமேல் பொறுத்துக்கொள்ள முடியாது என்றும், இது மிகவும் சகித்துக்கொள்ள முடியாத ஒன்று என்றும் அவர் காட்டமாகத் தனது பதிவில் தெரிவித்துள்ளார்.
ஈரானுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே தற்காலிகமாகப் போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டிருந்தாலும், கடல் வழி வர்த்தகம் மற்றும் துறைமுகக் கட்டுப்பாடுகள் விஷயத்தில் அமெரிக்கா இன்னும் தனது பிடியைத் தளர்த்தவில்லை. இதுதான் ஈரானியத் தரப்பிற்கு பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
வர்த்தகத் தடைகள் மற்றும் கடல் முற்றுகைகள் மூலம் ஈரானை மண்டியிட வைக்க அமெரிக்கா முயற்சி செய்வதாக ஈரான் அரசு தொடர்ந்து கூறி வருகிறது. ஆனால், அதை ராணுவ நடவடிக்கையின் ஒரு பகுதி என்று அதிபர் மசூத் பெசெஷ்கியன் தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவித்திருப்பது, இரு நாடுகளுக்கும் இடையிலான உறவு இன்னும் எவ்வளவு பதற்றமான சூழலில் இருக்கிறது என்பதைக் காட்டுகிறது.
துறைமுக முற்றுகையை ராணுவ நடவடிக்கையாக ஈரான் அதிபர் கருதுவது, எதிர்காலத்தில் மீண்டும் பெரிய மோதல்களுக்கு வழிவகுக்குமா என்ற அச்சத்தை உலக நாடுகளிடையே ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே அணு ஆயுதத் திட்டங்கள் மற்றும் அரசியல் மோதல்கள் நீடித்து வரும் நிலையில், அதிபரின் இந்த அதிரடியான கருத்து, அமெரிக்காவுடனான அடுத்தகட்ட பேச்சுவார்த்தையில் எந்த மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதுதான் தற்போதைய கேள்வி.
