பொதுவாகக் கடல் தண்ணீர் நீல நிறத்திலோ அல்லது பச்சை நிறத்திலோதான் இருக்கும் என்று நாம் பார்த்திருப்போம். ஆனால், ஈரான் நாட்டில் உள்ள ஒரு தீவில், அலைகடல் அனைத்தும் செக்கச் சிவந்த ரத்த நிறத்தில் காட்சியளிப்பது உலகையே வியப்பிலும், ஒருவித அச்சத்திலும் ஆழ்த்தியுள்ளது. சமூக வலைதளங்களில் வைரலாகும் இந்தக் காட்சிகள், “இது என்ன ரத்த ஆறா? அல்லது இறுதி நாளுக்கான அறிகுறியா?” என்ற கேள்வியை மக்கள் மத்தியில் எழுப்பியுள்ளது.
ஈரான் நாட்டின் பாரசீக வளைகுடா பகுதியில் அமைந்துள்ளது ஹார்முஸ் தீவு (Hormuz Island). மிகவும் அழகிய கடற்கரைகளைக் கொண்ட இந்தத் தீவில், நேற்று இரவு பெய்த கனமழையைத் தொடர்ந்து, காலையில் எழுந்து பார்த்த மக்களுக்குக் காத்திருந்தது ஒரு பேரதிர்ச்சி. கடற்கரை மணல் தொடங்கி, அலைகளாய் எழும் கடல் நீர் வரை எல்லாமே அடர் சிவப்பு நிறத்தில், அதாவது ரத்தம் உறைந்தது போல மாறியிருந்தது. இதைப் பார்த்த சுற்றுலாப் பயணிகள் மற்றும் நெட்டிசன்கள், இது ஏதோ அமானுஷ்யம் என்று பீதியடைந்தனர்.
ஆனால், இந்தச் சிவப்பு நிறத்திற்குப் பின்னால் இருக்கும் காரணம் எந்த அமானுஷ்யமும் இல்லை, முழுக்க முழுக்க அறிவியல்தான் என்று புவியியல் ஆய்வாளர்கள் விளக்கம் கொடுத்துள்ளனர். ஹார்முஸ் தீவு என்பது சாதாரணமாகவே “ரெயின்போ ஐலேண்ட்” (Rainbow Island) என்று அழைக்கப்படுகிறது. இந்தத் தீவின் மண்ணில் “ஹெமடைட்” (Hematite) எனப்படும் இரும்பு ஆக்சைடு தாதுக்கள் மிக அதிக அளவில் நிறைந்துள்ளன. இன்னும் எளிமையாகச் சொல்லப்போனால், நம் செவ்வாய் கிரகம் (Mars) ஏன் சிவப்பாக இருக்கிறதோ, அதே கனிமங்கள்தான் இந்தத் தீவின் மண்ணிலும் அதிகம் உள்ளன.
சாதாரண நாட்களில் இது மண்ணோடு மண்ணாக இருக்கும். ஆனால், எப்போதெல்லாம் கனமழை பெய்கிறதோ, அப்போதெல்லாம் மழை நீர் இந்த இரும்புச் சத்து நிறைந்த மண்ணைக் கரைத்துக்கொண்டு, மலையிலிருந்து நேராகக் கடலுக்குக் கொண்டு வருகிறது. நீரில் கரையும் அந்த இரும்பு ஆக்சைடு துகள்கள், கடல் தண்ணீரையும், கடற்கரை மணலையும் இப்படி ரத்தச் சிவப்பாக மாற்றுகின்றன. பார்ப்பதற்குக் கடல் நீரில் யாரோ ரத்தத்தைக் கலந்தது போலத் தெரிந்தாலும், இது முற்றிலும் இயற்கையானது மற்றும் சுற்றுச்சூழலுக்கு எந்த ஆபத்தும் இல்லாதது என்று விஞ்ஞானிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
இது எந்த விதமான ரசாயனக் கழிவோ அல்லது மாசுபாடோ கிடையாது. இந்தத் தீவு மஞ்சள், ஆரஞ்சு எனப் பல வண்ண மண் அடுக்குகளைக் கொண்டிருந்தாலும், மழைக் காலங்களில் இந்தச் சிவப்பு நிறம் தான் ஆட்சி செய்கிறது. இயற்கையின் இந்த விசித்திரமான வண்ண மாற்றத்தைக் காணவே உலகம் முழுவதிலும் இருந்து சுற்றுலாப் பயணிகள் இந்தத் தீவிற்குப் படையெடுக்கின்றனர். ஆக, பார்த்தால் பயங்கரம்.. ஆனால் உண்மையில் இது ஒரு அழகான இயற்கை அதிசயம்!
