Monday, September 1, 2025

IPL கதை முடிந்தது! BCCI-க்கு டாடா, துபாய்க்கு ஹாய்! அஸ்வினின் அடுத்த அதிரடி மூவ்!

இந்திய கிரிக்கெட்டின் சுழற்பந்து வீச்சு ஜாம்பவான், “கிரிக்கெட் மூளை” என்று வர்ணிக்கப்படும் ரவிச்சந்திரன் அஸ்வின், இப்போது தனது கிரிக்கெட் வாழ்க்கையில் ஒரு மிகப்பெரிய, யாரும் எதிர்பார்க்காத ஒரு முடிவை எடுக்கத் தயாராகி வருகிறார்.

“ஐபிஎல்லில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு, வெளிநாட்டு டி20 லீக்குகளில் விளையாட விரும்புகிறேன்,” என்று அவர் கூறியிருந்தது, இப்போது நிஜமாகப் போகிறது.

ஐக்கிய அரபு அமீரகத்தில் (UAE) நடைபெற உள்ள சர்வதேச லீக் டி20 (ILT20) போட்டியில் பங்கேற்பதற்காக, அஸ்வின் அந்த லீக்கின் அமைப்பாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த ILT20 லீக், டிசம்பர் 2 முதல் ஜனவரி 4 வரை நடைபெற உள்ளது. இதற்கான வீரர்கள் ஏலம், செப்டம்பர் 30 அன்று துபாயில் நடைபெற உள்ளது.

கிரிக்பஸ் செய்தி நிறுவனத்திடம் பேசிய அஸ்வின், இந்தச் செய்தியை உறுதிப்படுத்தியுள்ளார். “ஆம், நான் அமைப்பாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறேன். ஏலத்தில் பதிவு செய்தால், எனக்கு ஒரு அணி கிடைக்கும் என்று நம்புகிறேன்,” என்று அவர் கூறியுள்ளார்.

அஸ்வின், இந்த ILT20 ஏலத்தில் தேர்ந்தெடுக்கப்பட்டால், அந்த லீக்கில் இடம்பெறும் மிகப்பெரிய இந்திய வீரராக அவர் மாறுவார்.

இதற்கு முன்பு, ராபின் உத்தப்பா, யூசுப் பதான் போன்ற வீரர்கள் ILT20 அணிகளில் இடம்பெற்றிருந்தாலும், ஒரு போட்டியில் கூட விளையாடியதில்லை. அம்பதி ராயுடு மட்டும்தான், MI எமிரேட்ஸ் அணிக்காக எட்டுப் போட்டிகளில் விளையாடிய ஒரே இந்திய வீரர்.

அஸ்வின் போன்ற ஒரு ஜாம்பவான், இந்த லீக்கில் விளையாடுவது, இந்திய கிரிக்கெட்டிலும், வெளிநாட்டு லீக்குகளிலும் ஒரு புதிய அத்தியாயத்தைத் தொடங்கி வைக்கும். அஸ்வின், வெறும் ஒரு வீரராக மட்டும் வெளிநாட்டு லீக்குகளில் விளையாட விரும்பவில்லை.

அவர்,Player-Coach பதவியை அடைவதை நோக்கமாகக் கொண்டுள்ளார். 2026-ஆம் ஆண்டில், அமெரிக்காவில் நடைபெறும் மேஜர் லீக் கிரிக்கெட் (MLC) மற்றும் இங்கிலாந்தில் நடைபெறும் தி ஹண்ட்ரெட் (The Hundred) போட்டிகளிலும் இடம்பெற அவர் திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

65 டி20 போட்டிகளில் இந்தியாவிற்காகவும், 227 ஐபிஎல் போட்டிகளில் சென்னை, பஞ்சாப், டெல்லி, ராஜஸ்தான் போன்ற அணிகளுக்காகவும் விளையாடிய அனுபவம் கொண்ட அஸ்வின், வெளிநாட்டு லீக்குகளில் தனது முத்திரையைப் பதிப்பாரா? பொறுத்திருந்து பார்ப்போம்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்

Follow on Google News

Related News
Latest News