Sunday, July 27, 2025

IPL 2025 Updated ‘கேப்டன்கள்’ லிஸ்ட் SRH இத செய்யணும் ‘வலுக்கும்’ கோரிக்கை..

எப்போ தான்பா ஸ்டார்ட் ஆகும்? என்று, ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருந்த 18வது IPL தொடர் அடுத்த வாரத்தில் தொடங்குகிறது. முதல் போட்டியில் ரஹானே தலைமையிலான கொல்கத்தா அணி, ரஜத் தலைமையிலான பெங்களூருவை எதிர்கொள்கிறது.

கேப்டன் விஷயத்தை ஜவ்வுமிட்டாயாக இழுத்துவந்த டெல்லி அணி கடைசியில் போனால் போகிறது என, ”நீங்க எல்லாரும் நெனைச்ச மாதிரி, ஆல்ரவுண்டர் அக்சர் படேல் தான் எங்களோட புது கேப்டன்,” என்று அறிவித்து விட்டனர். அந்தவகையில் மற்ற அணிகளின் கேப்டன்கள் குறித்து இங்கே பார்க்கலாம்.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை 28 வயதான ருதுராஜ் கெய்க்வாட் வழிநடத்துகிறார். இதேபோல பெங்களூரு அணிக்கு 31 வயது ரஜத் படிதாரும், பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு 30 வயதில் இருக்கும் ஷ்ரேயஸ் அய்யரும், கேப்டனாக நியமிக்கப்பட்டு உள்ளனர்.

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை கடந்தாண்டு போல இந்தாண்டும், 30 வயதாகும் பேட் கம்மின்ஸ் தான் வழிநடத்த உள்ளார். மும்பை இந்தியன்ஸ் அணியை 2வது ஆண்டாக, 31 வயது ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியா வழிநடத்த இருக்கிறார். லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி தங்களின் புதிய கேப்டனாக, 27 வயது ரிஷப் பண்டினை தேர்வு செய்துள்ளது.

முதல் சீசனில் கப்படித்த ராஜஸ்தான் அணி, 30 வயது சஞ்சு சாம்சனுக்கே மீண்டும் கேப்டனை வாய்ப்பை அளித்துள்ளது. நடப்பு சீஸனின் வயதான கேப்டனாக கொல்கத்தாவின் அஜிங்கியா ரஹானே இருக்கிறார். 36 வயதாகும் அவருக்கு KKR கேப்டன் பதவியை தூக்கிக் கொடுத்துள்ளது.

இதேபோல சீசனின் இளம் கேப்டனாக குஜராத் டைட்டன்ஸ் அணியின் சுப்மன் கில் இருக்கிறார். 25 வயதில் அணியை 2வது ஆண்டாக கில் வழிநடத்த உள்ளார். நடப்பு தொடரை பொறுத்தவரை KKR தவிர்த்து பிற அணிகளின் கேப்டன்கள் அனைவருமே, 31 வயதுக்குள் தான் உள்ளனர்.

நீண்டகால அடிப்படையில், குறைந்தபட்சம் 3 முதல் 5 ஆண்டுகள் அணியை வழிநடத்த வேண்டும் என்ற எண்ணத்தில் அனைத்து அணிகளும், வயது குறைந்த வீரர்களுக்கே கேப்டன் பதவியை தூக்கிக் கொடுத்துள்ளன.

KKR மட்டும் அனுபவத்தை அடிப்படையாக வைத்து, ரஹானேவிற்கு கேப்டன் பதவி அளித்துள்ளது. நடப்பு சாம்பியன் அந்தஸ்தினை, அந்த அணி தக்கவைத்து கொள்ளுமா? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

இதில் டெல்லி, மும்பை 2 அணிகளும்  ஆல்ரவுண்டர்களுக்கு கேப்டன் வாய்ப்பு கொடுத்துள்ளன. சென்னை, பெங்களூரு, லக்னோ, குஜராத், ராஜஸ்தான், பஞ்சாப் மற்றும் கொல்கத்தா அணிகள், பேட்ஸ்மேன்களுக்கு கேப்டன் பதவி அளித்துள்ளன. ஹைதராபாத் அணி மட்டுமே பவுலரை கேப்டனாக்கி அழகு பார்த்துள்ளது.

இந்தநிலையில் நடப்பு தொடரில் ஹைதராபாத் தவிர்த்து மற்ற 9 அணிகளும், இந்திய வீரர்களையே கேப்டனாக அறிவித்து உள்ளன. அந்த அணி மட்டுமே வெளிநாட்டு வீரரை கேப்டனாக்கி வைத்துள்ளது. இதைப்பார்த்த ரசிகர்கள், ”உங்க டீம்ல உள்ள இந்திய வீரர், ஒருத்தருக்கு கேப்டன் பதவி கொடுங்க,” என சமூக வலைதளங்கள் வழியாக, அந்த அணிக்கு கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்

Follow on Google News

Latest news