சமீபத்தில் அறிவிக்கப்பட்ட IPL அட்டவணையால் அணிகளுக்கு இடையே பனிப்போர் வெடித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்த IPL அட்டவணை பிப்ரவரி 16ம் தேதி வெளியானது.
முதல் போட்டி மார்ச் 22ம் தேதி கொல்கத்தாவின் ஈடன் கார்டன் மைதானத்தில் நடக்கவுள்ளது. இதில் நடப்பு சாம்பியன் கொல்கத்தாவும், ரசிகர்களின் மனங்கவர்ந்த பெங்களூரும் மோதுகின்றன. புதிய கேப்டன் ரஜத் படிதார் தலைமையில் RCB இந்த IPL தொடரை எதிர்கொள்கிறது.
அதேநேரம் கொல்கத்தா இன்னும் தங்கள் கேப்டனை அறிவிக்காமல் உள்ளது. இந்தநிலையில் இந்த அட்டவணை முழுக்கவே CSK அணிக்கு சாதகமாக இருப்பதாக கடும் விமர்சனங்கள் எழுந்துள்ளன. இந்த தொடரை பொறுத்தவரை, ஒவ்வொரு அணிக்கும் ஹோம் கிரவுண்ட் உண்டு.
இதனால் தங்களின் சொந்த மைதானம் குறித்து ஒவ்வொரு அணியும் இஞ்ச் பை இஞ்சாக அறிந்து வைத்திருப்பர். எனவே ஹோம் கிரவுண்டில் நடக்கும் போட்டிகளில் அவர்களின் கையே ஓங்கியிருக்கும். இதில் தான் தற்போது பிரச்சினை வெடித்துள்ளது.
சென்னை அணி விளையாடும் முதல் 6 போட்டிகளில், 4 போட்டிகள் சென்னையில் நடைபெறுகின்றன. குறிப்பாக முதல் 2 போட்டிகள் அடுத்தடுத்து சிதம்பரம் ஸ்டேடியத்தில் நடக்க இருக்கின்றன. இதனால் முதல் 6 போட்டிகளில் 4 போட்டிகளை வென்றாலே, சென்னை எளிதாக பிளே ஆப் சென்று விடலாம்.
ஆனால் பிற அணிகளுக்கு அப்படி இல்லை. குறிப்பாக மும்பை தான் விளையாடவுள்ள முதல் 7 போட்டிகளில், 3 போட்டிகளை மட்டுமே வான்கடே மைதானத்தில் எதிர்கொள்கிறது. மீதம் 4 போட்டிகளுக்காக அவர்கள் சென்னை, பெங்களூரு, கொல்கத்தா, லக்னோ என மாறிமாறி அலைய வேண்டியது இருக்கும்.
மும்பைக்கு ஹோம் கிரவுண்டில் நடைபெறும் போட்டிகளும் கூட பெங்களூரு, கொல்கத்தா, ஹைதராபாத் என வலுவான அணிகளுடன் தான் உள்ளது. முதல் 7 போட்டிகள் அந்த அணிக்கு ‘கண்டம்’ என்பதாலும், பாதிக்கு மேல் தான் கோப்பை குறித்த அக்கறையே அவர்களுக்கு வரும் என்பதாலும், இந்த அட்டவணை மும்பைக்கு பின்னடைவாகத் தான் பார்க்கப்படுகிறது.
இதுகுறித்து கிரிக்கெட் விமர்சகர் ஆகாஷ் சோப்ரா, ”IPL அட்டவணையை பார்த்து, மகிழ்ச்சியடைந்த முதல் அணி CSK வாகத்தான் இருக்கும். அவர்களுக்கு ஏற்ற வகையில் அட்டவணை இருக்கிறது. அந்த அணிக்கு முதல் 6 போட்டிகளில் 4 போட்டிகள் சென்னையில் நடைபெறவுள்ளது.
அந்த 4 போட்டிகளில் வென்றால் கூட, அவர்களுக்கு 8 பாயிண்டுகள் கிடைத்துவிடும். இதனால், சுலபமாக பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறிவிட முடியும். சேப்பாக்கத்தில், CSK அணியை வீழ்த்துவது சுலபம் கிடையாது. பனியின் தாக்கம் நிச்சயம் இருக்கும்.
அஸ்வின், ஜடேஜா போன்றவர்களுக்கு மைதானம் நன்கு பழக்கப்பட்டிருக்கும். இதனால், அந்த அணி முதல் 6 போட்டிகளில், தற்போதே 4 வெற்றிகளை உறுதி செய்துவிட்டது என்றே நான் கருதுகிறேன். இதனால், முதல் அணியாக சென்னை, பிளே ஆப் இடத்தை உறுதி செய்ய வாய்ப்புகள் அதிகம் உள்ளன,” என்று தெரிவித்துள்ளார்.
இதைப்பார்த்த கிரிக்கெட் ரசிகர்கள், ”இப்படி ஒரு அணிக்கு மட்டும் பாரபட்சமா நடந்துக்குறதுக்கு, பேசாம அவங்களுக்கே கப்ப தூக்கி குடுத்துட வேண்டியது தானே,” என்று சமூக வலைதளங்களில் முட்டல், மோதல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த அட்டவணையால் அணிகளுக்கு மத்தியில், மறைமுக பனிப்போர் உருவாகியுள்ளது. இதனால் வழக்கத்தை விடவும் இந்த ஆண்டு, IPL தொடரில் சண்டை, சச்சரவுகளுக்கு குறைவிருக்காது என்றே தெரிகிறது.