ஆப்பிள் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த ஐபோன் 17 சீரிஸ் வந்தாச்சு… ஆனா வந்த வேகத்துல, குறிப்பாக ஒரு குறிப்பிட்ட மாடல், ஒரு குறிப்பிட்ட கலர்ல ஸ்டாக்கே காலியாகிவிட்டது. அமெரிக்கா முதல் இந்தியா வரை, ஆப்பிளின் புதிய “காஸ்மிக் ஆரஞ்சு” நிற ஐபோன் 17 ப்ரோ மேக்ஸுக்கு அப்படி ஒரு மவுசு. முன்பதிவு தொடங்கிய மூன்றே நாட்களில் ஸ்டாக் தீர்ந்து போனதன் பின்னணி என்ன? இந்தியாவின் பங்கு இதில் என்ன? விரிவாகப் பார்க்கலாம்.
ஆப்பிள் நிறுவனம் தனது புதிய ஐபோன் 17 சீரிஸை சமீபத்தில் வெளியிட்டது. இதன் முன்பதிவு செப்டம்பர் 12-ஆம் தேதி தொடங்கியது. ஆனால் தொடங்கிய வெறும் மூன்று நாட்களுக்குள், அமெரிக்கா மற்றும் இந்தியாவில், அனைவரையும் கவர்ந்த “காஸ்மிக் ஆரஞ்சு” நிற ஐபோன் 17 ப்ரோ மேக்ஸ் முழுவதுமாக விற்றுத் தீர்ந்துள்ளது. ஆப்பிள் இந்தியா இணையதளத்தின்படி, தற்போது இந்தியாவில் ஐபோன் ப்ரோ மேக்ஸ் சீரிஸில் எந்த மாடலையும் ஸ்டோரிலிருந்து பிக்-அப் செய்யும் வசதியுடன் முன்பதிவு செய்ய முடியவில்லை. சில கடைகளில் அடர் நீல நிறம் மட்டும் கிடைப்பதாகத் தெரிகிறது. இப்போது முன்பதிவு செய்பவர்களுக்கு, அக்டோபர் 7-ஆம் தேதிக்குப் பிறகுதான் போன் டெலிவரி செய்யப்படும் என்று கூறப்படுகிறது.
இந்த போன்களுக்கான அதிகாரப்பூர்வ விற்பனை செப்டம்பர் 19-ஆம் தேதி தொடங்குகிறது. அன்று, முன்பதிவு செய்யாதவர்களுக்காக சில கடைகளில் குறைந்த எண்ணிக்கையில் போன்கள் கிடைக்கும் என்றும், அது முதலில் வருபவர்களுக்கே முன்னுரிமை என்ற அடிப்படையில் வழங்கப்படும் என்றும் தெரிகிறது. இந்த ஐபோன் 17 சீரிஸின் விலை, இந்தியாவில் 82,900 ரூபாய் முதல் தொடங்கி, டாப் மாடலான ப்ரோ மேக்ஸ் 2 லட்சத்து 29 ஆயிரத்து 900 ரூபாய் வரை செல்கிறது. அமெரிக்காவில் இதன் விலை 799 டாலர் முதல் 1,999 டாலர் வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இந்த போனுக்கான தேவை இவ்ளோ அதிகமா இருப்பதற்குப் பின்னணியில், ஒரு பெரிய உற்பத்தி கதையே இருக்கிறது. தைவானைச் சேர்ந்த ஃபாக்ஸ்கான் நிறுவனம் தான் ஐபோன்களை சீனா மற்றும் இந்தியாவில் தயாரித்து வருகிறது. இதில் ஒரு முக்கியமான விஷயம் என்னவென்றால், இந்தியாவில் தயாரிக்கப்படும் ஐபோன்கள் அனைத்தும் அமெரிக்க சந்தையின் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காகவே அனுப்பப்படுகின்றன. ஆப்பிள், இந்த ஆண்டு தனது ஐபோன் உற்பத்தியை 60 மில்லியன் யூனிட்டுகளாக அதிகரிக்கத் திட்டமிட்டுள்ளது.
இந்தியாவில் ஆப்பிளின் வளர்ச்சி அபரிமிதமாக உள்ளது. மார்ச் 31, 2025 உடன் முடிந்த ஆண்டில் மட்டும், ஆப்பிள் நிறுவனம் சுமார் 22 பில்லியன் டாலர் மதிப்புள்ள ஐபோன்களை இந்தியாவில் அசெம்பிள் செய்துள்ளது, இது முந்தைய ஆண்டை விட 60 சதவீதம் அதிகம். இந்த ஆண்டின் முதல் பாதியில், ஆப்பிளின் விநியோகம் 21.5 சதவீதம் அதிகரித்து, 5.9 மில்லியன் யூனிட்டுகளை எட்டியுள்ளது. இதில் ஐபோன் 16 மாடல் தான் அதிகமாக விற்பனையாகியுள்ளது. ஜூன் காலாண்டில், இந்தியாவின் ஸ்மார்ட்போன் சந்தையில் ஆப்பிள் 7.5 சதவீத பங்கைப் பிடித்துள்ளது.
ஆனால், இந்தியாவில் ஆப்பிளின் இந்த வேகமான வளர்ச்சிக்கு சீனா மறைமுகமாகத் தடை போடுவதாகத் தகவல்கள் வருகின்றன. ஆப்பிள் தனது உற்பத்தியை இந்தியாவில் விரிவுபடுத்துவதற்குத் தேவையான மூலதனப் பொருட்கள் மற்றும் திறமையான மனிதவளத்தை சீனா முறைசாரா முறையில் கட்டுப்படுத்தி வருவதாகக் கூறப்படுகிறது.
ஆக, ஒருபுறம் புதிய காஸ்மிக் ஆரஞ்சு நிறத்திற்கு உலகளாவிய அடிதடி, மறுபுறம் இந்தியாவில் ஆப்பிளின் அசுர வளர்ச்சி, இன்னொருபுறம் சீனாவின் மறைமுகத் தடைகள் என ஐபோன் 17 ப்ரோ மேக்ஸ்-ஐ சுற்றி பல சுவாரஸ்யமான விஷயங்கள் நடந்து கொண்டிருக்கின்றன. இந்த காஸ்மிக் ஆரஞ்சு கலர் உங்களுக்குப் பிடித்திருக்கிறதா? நீங்க ஐபோன் வாங்கத் திட்டமிடுகிறீர்களா? உங்கள் கருத்துக்களை கமெண்டில் பதிவு செய்யுங்கள்.
