Tuesday, April 29, 2025

சிந்து நதி நீர் ஒப்பந்தம் ரத்து! இந்தியாவின் மிரட்டல்! பாகிஸ்தான் சந்திக்கப் போகும் பேரழிவு !

இது ஒரு தீர்மானமான தாக்கம். இந்தியா எடுத்திருக்கின்ற கடுமையான முடிவால், பாகிஸ்தான் இனி ஒவ்வொரு சொட்டுத் தண்ணீருக்காகவும் ஏங்க வேண்டிய நிலை ஏற்படலாம். ஏப்ரல் 22ம் தேதி செவ்வாய்க்கிழமை, ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் சுற்றுலா பயணிகள் மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதல் இந்திய அரசின் கடைசி பொறுமையையும் கடந்துவிட்டது. இதையடுத்து, புதன்கிழமை மாலை பிரதமரின் இல்லத்தில் கூடிய பாதுகாப்பு அமைச்சரவைக் குழுவான C.C.S. கூட்டத்தில் முக்கியமான தீர்மானங்கள் எடுக்கப்பட்டன.

இந்த தீர்மானங்களில் முக்கியமான ஒன்றாக, இந்தியா தற்போது பாகிஸ்தானுடன் உள்ள சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை நிறுத்துவதற்காக முடிவெடுத்துள்ளது. இது சாதாரண முடிவு அல்ல. இது பாகிஸ்தானின் வாழ்க்கைத் துடிப்பான சிந்து நதியை முற்றிலும் நிறுத்தும் வகையில் இருக்கும். இதற்கு மேலாக, பாகிஸ்தான் தூதரகம் இந்தியாவில் இனி இயங்காது. எந்த பாகிஸ்தானியருக்கும் இந்தியா இனி விசா வழங்காது. மேலும், அட்டாரி எல்லையும் உடனடியாக மூடப்படுகிறது.

சிந்து நதி நீர் ஒப்பந்தம் என்பது இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே 1960ம் ஆண்டு செப்டம்பர் 19ம் தேதி கையெழுத்திடப்பட்ட ஓர் சர்வதேச ஒப்பந்தம். இது, உலக வங்கியின் மத்தியஸ்தத்தில் கையெழுத்தானது. அப்போது இந்திய பிரதமராக இருந்த ஜவஹர்லால் நேரு மற்றும் பாகிஸ்தான் அதிபராக இருந்த அயூப் கான் இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர். இந்த ஒப்பந்தத்தின் மூலம், சிந்து, சட்லஜ், ஜீலம், செனாப், ரவி மற்றும் பியாஸ் என்ற ஆறு ஆறுகளின் நீரை பகிர்ந்து கொள்வதற்கான விதிமுறைகள் வகுக்கப்பட்டன.

ஆனால், இதில் மிகுந்த சீரற்ற தன்மை இருந்தது. சுமார் 80% நீர் பாகிஸ்தானுக்கு செல்லும் வகையிலான ஒப்பந்தமாக இது இருந்தது. இந்தியாவுக்கு வெறும் 20% நீர் மட்டுமே வழங்கப்பட்டது. பாகிஸ்தானின் முக்கியமான விவசாய நிலங்கள், குறிப்பாக பஞ்சாப் மாகாணம், இந்த சிந்து நதியையே சார்ந்தே தன்னை வாழ வைக்கிறது.

இந்த ஒப்பந்தத்தை நிறுத்தும் இந்தியாவின் முடிவால் பாகிஸ்தான் மிக கடுமையான பாதிப்பை சந்திக்கப்போகிறது. 210 மில்லியனுக்கும் அதிகமான மக்களின் குடிநீர், விவசாயத் தேவைகள் அனைத்தும் இந்த நதி அமைப்பையே சார்ந்தவை. இந்த முடிவால், பாகிஸ்தானில் உள்ள சுமார் 1.7 மில்லியன் ஏக்கர் நிலம் வெறிச்சோடி காய்ந்து போகும். பயிர்கள் வளராது. உணவுப் பொருட்களின் தட்டுப்பாடு உருவாகும். குடிநீரும் கிடைக்காமல் மக்கள் தவிக்க நேரிடும். இது ஒரு வகையில், பாகிஸ்தான் எதிர்கொள்கின்ற பொருளாதார நெருக்கடியை இன்னும் மோசமாக்கும்.

கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதமே இந்தியா சிந்து நதி ஒப்பந்தத்தை மீண்டும் பரிசீலிக்க வேண்டும் என நோட்டீஸ் அனுப்பியிருந்தது. இப்போது, பஹல்காம் பயங்கரவாத தாக்குதல், இந்தியாவை இந்த கடுமையான முடிவை எடுக்க வைத்திருக்கிறது.

Latest news