வட இந்தியாவின் நுரையீரல் என்று வர்ணிக்கப்படும், உலகின் மிகப் பழமையான மலைத்தொடர்களில் ஒன்றான ஆரவல்லி மலைத்தொடருக்கு ஒரு மிகப்பெரிய ஆபத்து வரவிருக்கிறது. ஆனால், இந்த ஆபத்து இயற்கையால் வரவில்லை, மனிதர்களால், அதுவும் ஒரு புதிய சட்டத்தால் வரவிருக்கிறது. அந்தச் சட்டம் மட்டும் அமலுக்கு வந்தால், ஆரவல்லி மலைத்தொடரின் 90 சதவிகிதப் பகுதி, இனிமேல் மலையே இல்லை என்று சொல்லப்பட்டு, சுரங்க மாஃபியாக்களின் வேட்டைக்காடாக மாறிவிடும் என்ற அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.
டெல்லியில் இருந்து குஜராத் வரை நீண்டிருக்கும் இந்த மலைத்தொடர், கோடிக்கணக்கான மக்களின் உயிர்நாடியாக விளங்குகிறது. ஆனால், இப்போது மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம், உச்ச நீதிமன்றத்தில் ஒரு புதிய வரைவைத் தாக்கல் செய்துள்ளது. அதன்படி, 100 மீட்டர், அதாவது சுமார் 330 அடி உயரத்திற்கு மேல் இருக்கும் மலைகள் மட்டும்தான் ஆரவல்லி மலைகளாகக் கருதப்பட்டு, பாதுகாக்கப்படும். 100 மீட்டருக்குக் குறைவான மலைகள் எல்லாம், இனி சாதாரண நிலமாகவே கருதப்படும்.
இந்த புதிய விதியால் என்ன பிரச்சனை என்று கேட்கிறீர்களா? ராஜஸ்தானில் மட்டும் 12,000-க்கும் மேற்பட்ட குன்றுகள் உள்ளன. ஆனால், இந்த புதிய சட்டத்தின்படி, அதில் வெறும் 1,048 குன்றுகள் மட்டுமே மலைகள் என்ற தகுதியைப் பெறும். அப்படியென்றால், கிட்டத்தட்ட 90 சதவிகித மலைகள், இனி பாதுகாப்பு வளையத்திலிருந்து வெளியே வந்துவிடும். அங்கு யார் வேண்டுமானாலும் சுரங்கம் தோண்டலாம், கட்டிடங்களைக் கட்டலாம். இந்த மலைகள் ஒரு காலத்தில் இருந்ததற்கான சுவடே இல்லாமல் போய்விடும்.
இந்த புதிய சட்டம் வருவதற்கு முன்பே, ஆரவல்லி மலைத்தொடர் சட்டவிரோத சுரங்கங்களால் சிதைந்து கொண்டிருக்கிறது என்பதுதான் கசப்பான உண்மை. உச்ச நீதிமன்றம் தடை விதித்த பின்பும், சுரங்க மாஃபியாக்கள், ராத்திரிக்கு ராத்திரியாக மலைகளைக் குடைந்து வருகின்றனர். இதை விசாரிக்கச் சென்ற செய்தியாளர் குழுவையே, மர்ம நபர்கள் விரட்டிய சம்பவம், அங்கு நடக்கும் அராஜகத்தை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது.
சுற்றுச்சூழல் நிபுணர் எல்.கே. சர்மா, “மலையின் உயரத்தை, அதன் அடியிலிருந்து கணக்கிடுவது ஒரு அடிப்படத் தவறு; கடல் மட்டத்திலிருந்துதான் கணக்கிட வேண்டும்,” என்று எச்சரிக்கிறார். இந்த புதிய சட்டம் மட்டும் அமலுக்கு வந்தால், அது சுரங்க மாஃபியாக்களுக்கு சிவப்புக் கம்பளம் விரிப்பது போல ஆகிவிடும். ஒரு சிலரின் லாபத்திற்காக, கோடிக்கணக்கான மக்களின் உயிர்நாடியாக விளங்கும் ஒரு சரித்திரச் சின்னத்தையே நாம் இழக்கப் போகிறோமா என்ற கேள்வி, இப்போது எல்லோர் மனதிலும் எழுந்துள்ளது.
