உலகமே உற்றுநோக்கும் மத்திய கிழக்கு போரில் இப்போது ஒரு மிக விசித்திரமான மற்றும் அதிர்ச்சிகரமான சம்பவம் நடந்துள்ளது. இஸ்ரேல் மீது ஏவப்பட்ட ஈரான் நாட்டு ஏவுகணைகளில் “இந்திய மக்களுக்கு நன்றி” என்கிற வாசகங்கள் இடம்பெற்றுள்ளன.
ஈரானின் 83-வது அலை தாக்குதலின் போது, அந்நாட்டு ராணுவத்தினர் நீல நிற மார்க்கரால் ஏவுகணைகளின் மீது இந்தியாவிற்கு நன்றி தெரிவிக்கும் வாசகங்களை எழுதிய வீடியோக்கள் இணையத்தில் தீயாய் பரவி வருகின்றன. குறிப்பாக, காஷ்மீர் மக்கள் செய்த மனிதாபிமான உதவிகள் மற்றும் இந்தியக் குழந்தைகள் தங்களின் உண்டியல் பணத்தை ஈரான் மாணவர்களுக்கு வழங்கிய நெகிழ்ச்சியான சம்பவங்களுக்கு கைமாறாகவே ஈரான் இந்த நன்றியைத் தெரிவித்துள்ளது. மேலும், போர்க்களத்திலும் இந்தியக் கப்பல்களுக்கு மட்டும் ஹார்முஸ் ஜலசந்தியில் பாதுகாப்பான வழியை வழங்குவதாக ஈரான் அறிவித்துள்ளது உலக நாடுகளைத் திரும்பிப் பார்க்க வைத்துள்ளது.
மறுபுறம், போர்க்களம் இப்போது இன்னும் விஸ்வரூபம் எடுத்துள்ளது. ஏமனின் ஹவுதி கிளர்ச்சியாளர்கள், போர் தொடங்கிய பிறகு முதன்முறையாக இஸ்ரேல் மீது ஏவுகணைத் தாக்குதல் நடத்தி தங்களின் நேரடிப் பங்களிப்பை உறுதி செய்துள்ளனர். “எங்கள் விரல்கள் இப்போது துப்பாக்கியின் ட்ரிக்கரில் இருக்கிறது” என்று எச்சரித்த சில மணிநேரங்களிலேயே இந்தத் தாக்குதல் நடந்துள்ளது.
குறிப்பாக, செங்கடல் பகுதியை ஈரானுக்கு எதிரான தாக்குதல்களுக்குப் பயன்படுத்தினால், ஒட்டுமொத்த சர்வதேச கடல்வழிப் பாதையையும் முடக்குவோம் என்று ஹூதிகள் விடுத்த மிரட்டல், அமெரிக்காவையும் இஸ்ரேலையும் பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
ஆனால், இந்தப் போரை விட இப்போது அமெரிக்காவிற்கும் இஸ்ரேலுக்கும் இடையே வெடித்துள்ள உட்கட்சி மோதல் தான் மிகப்பாரிய விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வேன்ஸ் மற்றும் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு இடையே நடந்த டென்ஷனான தொலைபேசி உரையாடல் இப்போது கசிந்துள்ளது.
ஈரானில் ஆட்சி மாற்றம் செய்வது மிக எளிதான விஷயம் என்று நெதன்யாகு முன்பு கொடுத்த வாக்குறுதிகள் அனைத்தும் வெறும் பொய் என்று வேன்ஸ் அவரை நேரடியாகவே கண்டித்துள்ளார். “பிபி (நெதன்யாகு) ஒரு பொய்யான பிம்பத்தை அமெரிக்காவிடம் விற்றுவிட்டார்” என்று அமெரிக்க அதிகாரிகள் இப்போது பகிரங்கமாகக் குற்றம் சாட்டுகின்றனர்.
அதுமட்டுமில்லாமல், ஈரானுடன் ஒரு சுமுகமான முடிவுக்கு வர ஜே.டி. வேன்ஸ் எடுக்கும் முயற்சிகளை இஸ்ரேல் திட்டமிட்டே சீர்குலைப்பதாக அமெரிக்கத் தரப்பில் இருந்து வரும் தகவல்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஒருபுறம் ஏமனின் ஏவுகணைத் தாக்குதல், மறுபுறம் இந்தியாவிற்கு ஈரான் தெரிவிக்கும் நன்றி, இன்னொரு பக்கம் அமெரிக்கா – இஸ்ரேல் இடையிலான விரிசல் என மத்திய கிழக்கு பிராந்தியம் இப்போது ஒரு மிகப்பெரிய வெடிமருந்து கிடங்காக மாறியுள்ளது. இந்தப் போர் இன்னும் தீவிரமடையுமா அல்லது அமைதிக்கு வழிவகுக்குமா என்பதை நாம் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
