Thursday, December 25, 2025

இந்தியாவின் சட்டவிரோத துப்பாக்கி கலாச்சாரம்: வலதுசாரி அமைப்புகளுக்கு சிறப்பு அனுமதியா?

2014-ம் ஆண்டு பிரதமர் மோதி தலைமையிலான பாஜக அரசுஅமைந்த பிறகு இந்தியாவில்  துப்பாக்கி கலாச்சாரம் அதிகரித்துள்ளதை மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் வெளிப்படையாக ஒப்புக்கொண்டுள்ளது.

உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட (SLP(CRL) NO.12831/2022  titled Rajendra Singh vs. State of Uttar Pradesh) வழக்கில் இந்தியாவில் அதிகரித்து வரும் சட்டவிரோத துப்பாக்கிகள் தொடர்பாக தன்னிச்சையாக ஒரு வழக்கை நீதிபதிகள் விசாரணைக்கு எடுத்தனர்.

இந்த வழக்கில், மத்திய அரசு சார்பில் சார்பில், 14-09-2023 அன்று தாக்கல் செய்யப்பட்ட பிராமணப்பத்திரத்தில் கீழ்கண்டவாறு உள்துறை அமைச்சகம் கூறியுள்ளது.

2017 முதல் 2021 வரையிலான காலகட்டத்தில் கைப்பற்றப்பட்ட சட்டவிரோத ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகளின் எண்ணிக்கை தேசிய குற்ற ஆவணக்காப்பகத்திலிருந்து பெறப்பட்டுள்ளது.

இது சட்டவிரோத ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகளின் பயன்பாட்டில் அதிகரித்து வரும் போக்கைக் காட்டுகிறது என வெளிப்படையாக உள்துறை அமைச்சகம் ஒப்புக்கொண்டுள்ளது. 

சட்டவிரோத ஆயுதங்கள் அதிகரிப்பை உள்துறை அமைச்சகம் (14-09-2023) ஒப்புக்கொண்டு தாக்கல் செய்த பிரமாணப் பத்திரம்

அதே வழக்கில் 28.07.2025 அன்று உச்சநீதிமன்றம் பிறப்பித்த மற்றொரு உத்தரவின் அடிப்படையில் உள்துறை அமைச்சகம், 08-08-2025 அன்று பிறப்பித்த (No.V-11026/08/2023-Arms) குறிப்பாணையின் மூலம் நாடு முழுவதும் சட்ட விரோத துப்பாக்கிகளால் ஏற்படும் அச்சுறுத்தல் மற்றும் சட்டப்பூர்வ துப்பாக்கிகள் தொடர்பான பிரச்சினை ஆகியவற்றைக் கையாள்வதற்கும். அவற்றின் அங்கீகரிக்கப்படாத பயன்பாட்டைக் கட்டுப்படுத்துவதற்கும் ஒரு திட்டத்தைப் பரிந்துரைப்பதற்காக, Director General of the Bureau of Police Research and Development (BPR&D)  தலைமையில் ஒரு நிபுணர் குழுவை அமைத்துள்ளது.

அந்தக்குழுவில், Intelligence Bureau-ன் இணை இயக்குனர், NIA-வின் கூடுதல் இயக்குனர், பஞ்சாப்,ஹரியானா,அஸ்ஸாம், உத்தரபிரதேசம், டெல்லி மாநிலங்களின் உள்துறை(முதன்மை செயலாளர்கள்), பஞ்சாப்,கர்நாடகா,பீஹார்,மஹாரஷ்டிரா மாநிலங்களின் கூடுதல் காவல்துறை தலைவர்கள் மற்றும் (BPR&D) -ன் கூடுதல் இயக்குனர் உள்ளிட்ட மொத்தம் 12 பேர் இடம்பெற்றுள்ளனர்.

இதே போன்று மாநில அளவிலும் தலைமை செயலாளரை தலைவராக கொண்டு, உள்துறை செயலாளர், காவல்துறைதலைவர், சட்டத்துறை செயலாளர் மற்றும் ஆயுதங்கள் குறித்து நன்கு நிபுணத்துவம் பெற்ற ஒருவரை கொண்ட குழு அமைக்க வேண்டுமென உச்சநீதிமன்றம் மிகத்தெளிவாக தீர்க்கமாக உத்தரவு பிறப்பித்துள்ளது.

இந்த வழக்கில் 11-08-2025 அன்று இறுதி உத்தரவு பிறப்பித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள் B.V.நாகரத்னா, K.V.விஸ்வநாதன் அடங்கிய அமர்வு, நிபுணர் குழுவின் பரிந்துரைகளின் படி சட்டவிரோத துப்பாக்கிகளின் பயன்பாட்டை கட்டுப்படுத்தவும், சமூகத்தில் நிலவும் அச்சுறுத்தலை குறைக்கவும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென மத்திய மாநில அரசுகளுக்கு உத்தரவிட்டுள்ளது. 

உச்சநீதிமன்ற உத்தரவின்படி உள்துறை அமைச்சகம் அமைத்துள்ள நிபுணர் குழு விவரங்கள்

Screenshot

உள்துறை அமைச்சகம் உச்சநீதிமன்றத்தில் உண்மைகளை ஏதும் மறைத்ததா ? என விரிவாக பார்க்கலாம்.

03-03-2015 அன்று தற்போதைய JALSAKTHI துறையின் மத்திய அமைச்சர் C. R. Patil “ILLEGAL ARMS” குறித்த கேள்வி ஒன்றை மக்களவையில் எழுப்புகிறார். அதற்கு உள்துறை அமைச்சகம் சார்பில் அப்போதைய மத்திய இணை அமைச்சர் Mr.Haribhai Parathibhai Chaudhary எழுத்துப்பூர்வமாக பதில் கொடுத்துள்ளார்.

அதில்,இந்தியாவில் 2011 முதல் 2014 ஆகஸ்ட் வரையிலானகாலத்தில் சட்டவிரோத துப்பாக்கிகள் பறிமுதல் குறித்த விபரங்கள் கீழ்கண்டவாறு இடம் பெற்றுள்ளன.

2011-9361, 2012-4619, 2013-3396, 2014 (upto August, 2014)- 2975 என மொத்தம் 20,351 சட்டவிரோத துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என உள்துறை அமைச்சகம் கூறியுள்ளது. அதேநேரம் சட்டவிரோத துப்பாக்கி வைத்திருப்போர் குறித்த உத்தேச கணக்கு விபரங்கள் உள்ளதா என்ற கேள்விக்கு No sir என்று மட்டுமே பதில் கொடுத்துள்ளது.

கவனிக்கவும் : 2011-ல் இருந்து 2014 ஆகஸ்ட் வரையிலான பறிமுதல் விபரங்களை நாடாளுமன்றத்தில் மத்திய அரசு கூறிவிட்டது. 2017-க்கு பிறகு நாட்டில் துப்பாக்கிகள் அதிகரித்துள்ளதை உச்சநீதிமன்றத்திலும் மத்திய அரசு பிரமாணப்பத்திரம் மூலமாகவும் ஒப்புக்கொண்டது..

illegal arms தொடர்பாக லோக்சபாவில் உள்துறை அமைச்சகம் US Question No – 1161 (03-03-2015) வழங்கிய பதில்

ஆனால், இடைப்பட்ட காலமான 2014-ன் முழுமையான பறிமுதல் மற்றும் 2015, 2016 ஆண்டில் நடந்த சட்ட விரோத துப்பாக்கிகளின் பறிமுதல் கணக்குகள் என்னவானது?

நம்புங்கள். குறிப்பிட்ட அந்த 3 ஆண்டுகளுக்கான தரவுகளே இந்தியாவின் உள்துறை அமைச்சகத்தில் இல்லை என்கிறது மத்திய அரசு. 2014 முதல் 2016 வரையிலான காலத்தில் பறிமுதல் செய்யப்பட்ட சட்டவிரோத துப்பாக்கிகள் குறித்த விபரங்கள்கோரி RTI சட்டத்தின் கீழ் உள்துறை அமைச்சகத்திற்கு மனுதாக்கல் செய்யப்பட்டது.

அந்த மனுவை உள்துறை அமைச்சகம், தேசிய குற்ற ஆவணகாப்பகத்திற்கு மாற்றம் செய்கிறது. தேசிய குற்ற ஆவணக்காப்பகமோ 2014 முதல் 2016 வரையிலான காலத்தில் பறிமுதல் செய்யப்பட்ட சட்ட விரோத துப்பாக்கிகள் தொடர்பாக பிரத்யேக தகவல்கள் இல்லை என்று பதில் தருகிறது.

அதன் காரணமாக 03-03-2015 அன்று “ILLEGAL ARMS” குறித்த தரவுகளை நாடாளுமன்றத்தில் உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளதை குறிப்பிட்டு, மீண்டும் முழுமையான தரவுகளை வழங்கவேண்டுமென மேல்முறையீடு செய்யப்பட்டது.

அந்த மேல்முறையீட்டு விண்ணப்பத்திற்கு, உள்துறை அமைச்சகத்தின் (ARMS Division) NCRB முன்பே கூறியது போல பிரத்யேக தகவல் ஏதுமில்லை என்பதை உறுதிப்படுத்தி பதிலை வழங்கியுள்ளது. உங்களால் நம்ப முடிகிறதா..!

இந்தியாவில் பிஜேபி ஆட்சி அமைந்த பிறகு 2014, 2015, 2016 ஆகிய 3 ஆண்டுகளில் மத்திய மற்றும் மாநில ஏஜென்சிகளால் பறிமுதல் செய்யப்பட்ட சட்ட விரோத துப்பாக்கிகள் குறித்த தரவுகளே உள்துறை அமைச்சகத்திடம் இல்லை.

அப்படி என்றால், பறிமுதல் செய்யப்பட்ட துப்பாக்கிகள் என்னவானது? கள்ளச்சந்தையில் மீண்டும் விற்பனை செய்யப்பட்டதா ? என்ற எந்த கேள்விகளுக்கும் இந்திய அரசாங்கத்திடம் பதில்கள் இல்லை.

2014, 2015, 2016 ஆண்டுகளில் நடந்த சட்டவிரோத துப்பாக்கி பறிமுதல் தரவுகள் இல்லை என உள்துறை அமைச்சகம் ஒப்புக்கொள்ளும் RTI பதில்கள்.

ஆண்டுதோறும் இந்தியாவில் நடக்கும் குற்றங்கள் தொடர்பாக NCRB, Crime in India என்ற தலைப்பில் ஆண்டறிக்கையை வெளியிடுகிறது. அந்த அறிக்கையின் படி, 2017 முதல் 2023 காலக்கட்டத்தில் நடந்துள்ள சட்டவிரோத துப்பாக்கிகளின் பறிமுதல் தரவுகள் மிக மிக அதிர்ச்சியூட்டக்கூடியதாக உள்ளது.

தேசிய குற்ற ஆவணக்காப்பகம் யாரிடமிருந்து துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டது என்பதை  2 வகையாக பட்டியலிடுகிறது 

  1. Anti Nationals 
  2. From Others 

அப்படி வகைப்படுத்தப்பட்டவர்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட சட்டவிரோத துப்பாக்கிகளின் ஆண்டுவாரியான பட்டியல் 

2017 முதல் 2023 வரையிலான சட்டவிரோத துப்பாக்கி பறிமுதல் குறித்த NCRB ரிப்போர்ட்

அதாவது NCRB -ன் அறிக்கை படி கடந்த 7 ஆண்டுகளில் மொத்தம் 5,43,528 சட்டவிரோத துப்பாக்கிகள் இந்தியாவில் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அதில், தீவிரவாதிகள்,நக்சலைட்டுகள், மாவோயிஸ்டுகள் மற்றும் வடகிழக்கு மாநில கிளர்ச்சியாளர்களிடம் இருந்து 33,602 துப்பாக்கிகள் மட்டுமே பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மீதமிருக்கும் 5,09,926 சட்டவிரோத துப்பாக்கிகள் நாட்டில் மிகச்சாதாரணமாக உலவும் நபர்களிடம் இருந்தே பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக NCRB-ன் அறிக்கை கூறுகிறது.

2014-ல் பிஜேபி அரசு அமைந்த பிறகு சராசரியாக ஆண்டுக்கு 70,000 சட்டவிரோத துப்பாக்கிகளின் பறிமுதல் நடந்து வருகிறது. பறிமுதல் அதிகரிக்கிறது என்றால், மத்திய அரசு தடுப்பை நடவடிக்கையை தீவிரப்படுத்தியுள்ளது என்று தானே அர்த்தம் என்று கூட படிப்பவர்களுக்கு தோன்றலாம்.

பறிமுதல் அதிகரிக்கிறது என்றால் பயன்பாடு அதிகமாகியுள்ளது. துப்பாக்கிகளின் உற்பத்தி அதிகமாகியுள்ளது. பயன்படுத்துவோர் அதிகமாகியுள்ளனர் என்றே அர்த்தம். இதை மத்திய அரசும் மிகத்தெளிவாக உச்சநீதிமன்றத்தில் ஒப்புக்கொண்டுள்ளது.

கடந்த 7 ஆண்டுகளில் பறிமுதல் செய்யப்பட்ட 5,43,528  துப்பாக்கிகளின் உத்தேச சந்தை மதிப்பு எவ்வளவு ?

உள்நாட்டில் தயாரிக்கப்படும் துப்பாக்கி முதல் அயல்நாட்டில் இருந்து கடத்திவரப்பட்ட/வாங்கப்பட்ட நவீன ரக துப்பாக்கிகள் வரை மத்திய மாநில ஏஜென்சிகளால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

ஆகையால், சராசரியாக ஒரு துப்பாக்கியின் மதிப்பை சுமார் இருபதாயிரம் என மதிப்பிட்டால் கூட கிட்டத்தட்ட 1087 கோடி ரூபாய் அளவிற்கு சட்டவிரோத துப்பாக்கிகளின் வர்த்தகம் 2017-2023 வரை இந்தியாவில் நடந்துள்ளது.

மீண்டும் குறிப்பிடுகிறேன். 2014 முதல் 2016 வரையில் பறிமுதல் செய்யப்பட்ட துப்பாக்கிகள் என்னவானது ? எவ்வளவு பறிமுதல்  செய்யப்பட்டது என்ற எந்த தரவுகளும் இந்தியாவின் உள்துறை அமைச்சகத்திடம் இல்லை. இல்லவே இல்லை

சரி..இந்தியாவில் அனுமதி பெற்று துப்பாக்கிகள் வைத்திருப்போர் எண்ணிக்கை எவ்வளவு ?

18-04-2023 அன்று உள்துறை அமைச்சகத்தின் National Database of Arms Licenses பிரிவு கொடுத்துள்ள தரவுகளின் படி இந்தியாவில்  37,51,127 பேருக்கு துப்பாக்கிகள் வைத்துக்கொள்ள உள்துறை அமைச்சகம் அனுமதி வழங்கியுள்ளது. சிறிய ரக ஆயுதங்கள் தயாரிக்கும் அனுமதி 112 நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும் உள்துறை அமைச்சகம் கூறுகிறது. நாட்டிலேயே மிக அதிகமாக 13,22,714 பேர் அனுமதி பெற்று துப்பாக்கிகள் வைத்திருக்கும் மாநிலம் உத்திரபிரதேசம் மட்டுமே 

இந்தியாவில் துப்பாக்கி உரிமம் பெற்றுள்ள நபர்களின் எண்ணிக்கை குறித்து உள்துறை அமைச்சகம் வழங்கியுள்ள RTI பதில் (18-04-2023)

காவல்துறையை காட்டிலும் தனியார் வசம் கூடுதலாக Fire Arms உள்ளதா?

Bureau of Police Research and Development -ன் 2024 ம் ஆண்டு அறிக்கை இந்தியாவில் உள்ள மொத்தம்  4469-IPS அதிகாரிகள் இருப்பதாக கூறுகிறது. 18,284 காவல்நிலையங்கள் இருப்பதாகவும் அதில் உயரதிகாரிகள் உட்பட பணியாற்றக்கூடிய மொத்த போலீஸ் படையின் எண்ணிக்கை 27,55,274 என்றும் BPR&D தெரிவிக்கிறது

CENTRAL ARMED POLICE FORCES என வகைப்படுத்தப்பட்டுள்ள CRPF,CISF,BSF,ITBP,Assam Rifles,SSB ல் உள்ள வீரர்களின் எண்ணிக்கை 10,39,706. இந்தியாவிலேயே அதிகமான காவல் நிலையங்கள் தமிழ்நாட்டில் தான் உள்ளது எண்ணிக்கை 2349. குறைந்த எண்ணிக்கையாக 11 காவல்நிலையங்கள் மட்டுமே உள்ள யூனியன் பிரதேசம் “லடாக்”.

Bureau of Police Research and Development – ன் (01-01-2024) ஆண்டறிக்கை படி நாட்டில் உள்ள போலீஸ் மற்றும் மத்திய ஆயுதப்படை வீரர்களின் மொத்த எண்ணிக்கை விபரம்.

இப்போது ஒப்பிட்டு பாருங்கள்…ஒரு உதாரணத்திற்கு இந்தியாவில் உள்ள அத்தனை உள்நாட்டு போலீசாரும் துப்பாக்கி வைத்துள்ளார்கள் என கருதினாலும் 27,55,274-Fire Arms மட்டுமே இந்திய காவல்துறையின் வசம் உள்ளது. ஆனால், இந்த நாட்டில் துப்பாக்கி உரிமம் பெற்றுள்ள தனிநபர்களின் எண்ணிக்கை 37,51,127. அதாவது, நாட்டிலுள்ள மொத்த போலீஸ் வைத்திருப்பதை விட 9,95,853 துப்பாக்கிகள் கூடுதலாக தனி நபர்கள் உரிமம் பெற்று வைத்துள்ளனர்.

மத்திய ஆயுதப்படையில் மொத்தம் உள்ள வீரர்கள் 10,39,706 பேரிடமும் Fire Arms இருக்கிறது என அவர்களையும் இணைத்து  கணக்கிட்டாலும் கூட, தனியார் வசம் இருப்பதைக்காட்டிலும் இந்தியாவின் உள்நாட்டு பாதுகாப்பு படையிடம் 43,853-Fire Arms மட்டுமே கூடுதலாக உள்ளது. இது எவ்வளவு பேராபத்தான விஷயம்.

மற்றொரு பக்கம், ஆண்டுக்கு 60,000 முதல் 70,000  வரை சட்ட விரோத துப்பாக்கிகளின் பறிமுதல் வேறு நடக்கிறது. 2017 முதல் 2023 வரை 5,43,528 சட்டவிரோத துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அவை முறையாக அழிக்கப்பட்டுள்ளதா என்ற சந்தேகமும் எழுகிறது. 

உண்மையில் யாரை அச்சறுத்த சட்டவிரோத துப்பாக்கிகள் பயன்படுகிறது?

உச்சநீதிமன்றத்தில் நடந்த (SLP(CRL) NO.12831/2022  titled Rajendra Singh vs. State of Uttar Pradesh) என்ற வழக்கில்  கீழ்கண்டவாறு உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. 

தேசிய புலனாய்வு முகமை சட்டம்,

2008-ன் கீழ் தேசியபுலனாய்வு முகமை, சட்டவிரோத ஆயுதங்களுக்கு எதிராக தீவிர விசாரணை மற்றும் நடவடிக்கை எடுத்து வருகிறது என்று உள்துறை அமைச்சகம் தாக்கல் செய்த பிரமாணப்பத்திரத்தில் தெளிவாக கூறியுள்ளது. ஆனால், உண்மையில் தேசிய புலனாய்வு முகமையோ அல்லது மாநில காவல்துறையோ சட்டவிரோத துப்பாக்கி வைத்திருப்போருக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கிறதா?

நிச்சயம் எடுக்கிறார்கள். யார் மீது என்பது தான் கவனிக்கப்பட வேண்டிய விஷயம். இஸ்லாமிய சமூகத்தை சேர்ந்தவர்கள் மீது மட்டுமே தீவிரமான நடவடிக்கை எடுக்கப்படுகிறது. UAPA சட்டத்தின் கீழ் தேசிய புலனாய்வு முகமை வழக்கு பதிவு செய்து விசாரிக்கிறது. ஆனால், வலதுசாரி அமைப்பினர் மற்றும் பசு பாதுகாவலர்கள் என கூறிக்கொள்ளும் அமைப்பினர் மீது அதே மாதிரியான நடவடிக்கை எடுக்கப்படுகிறதா என்றால் பதில் நிச்சயம் இல்லை என்பதே எதார்த்தம்.

இந்திய அரசு 2019 ம் ஆண்டு Arms (Amendment) Act-ல் மத்திய பல திருத்தங்களை கொண்டு வந்தது. அதன்படி, ஆயுதச் சட்டத்தின் விதிகளை மீறுபவர்களுக்கான தண்டனையை அதிகரிக்கும் வகையில் ஆயுதச் சட்டம் பொருத்தமான வகையில் திருத்தப்பட்டுள்ளது மற்றும் சில வெளிப்பாடுகளின் வரையறைகள் விரிவுபடுத்தப்பட்டுள்ளன என்று உச்சநீதிமன்றத்தில் உள்துறை அமைச்சகம் பிரமாணப்பத்திரம் தாக்கல் செய்துள்ளது.

ஆனால், அப்படியான எந்த நடவடிக்கைகளையும் இந்துத்துவ அமைப்பினர் மீதோ, பசு பாதுகாப்பு குழுவினர் மீதோ இந்தியாவில் இதுவரை எந்த மாநிலத்திலும் எடுக்கப்படவில்லை. ஒரே ஒரு வழக்கை கூட தேசிய புலனாய்வு முகமை இன்றைய தேதி வரை பதிவு செய்யவில்லை.

நாடு முழுமைக்கும் ஒரே மாதிரி அமல்படுத்த வேண்டிய ஆயுத சட்டம், மதத்தின் அடிப்படையில் பாரபட்சமாக செயல் படுத்தப்படுகிறதா?

NCRB -ன் அறிக்கையின் படி, இந்தியாவில் அதிகமாக சட்டவிரோத துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்படும் மாநிலங்கள் உத்திரபிரதேசம், மத்தியபிரதேசம், ராஜஸ்தான், பீகார், ஹரியானா,மஹாராஷ்டிரா,குஜராத், அஸ்ஸாம் மற்றும் மேற்கு வங்கம் மட்டுமே.

இதில் பிஜேபி ஆளும் மாநிலங்களே பெரும்பான்மையானவை. இந்த மாநிலங்களில் சட்டவிரோத துப்பாக்கியோடு நகர் வலம் வருவதற்கும், தேசிய நெடுஞ்சாலைகளில் செல்லும் வாகனங்கள் மீது துப்பாக்கிசூடு நிகழ்த்துவதற்கும், அச்சுறுத்தி சோதனை செய்வதற்கும், ஹிந்து அமைப்பினருக்கும், பசு பாதுகாவலர்களுக்கும் முழுமையான அனுமதியை ஏதும் உள்துறை அமைச்சகம் வழங்கியுள்ளதா என்ற கேள்வி எழுகிறது.

சமூக வலைத்தளமான இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தினந்தோறும் சட்ட விரோத துப்பாக்கியோடு தாங்கள் செய்யும் அட்டூழியங்களை பசு பாதுகாப்பு குழுவினர் வெளிப்படையாக பதிவிட்டுக்கொண்டே இருக்கின்றனர்.

உண்மையில் இந்தியாவில் தான் இப்படி நடக்கிறதா என திகிலூட்டும் காட்சிகளை உங்களால் சாதாரணமாக பார்க்க முடியும். வலதுசாரி அமைப்பினர் துப்பாக்கி மூலமாக அச்சுறுத்துவதும், கொடூரமான தாக்குதல் நடத்துவதும் முழுக்க முழுக்க சிறுபான்மை சமூகத்தினர் மீது மட்டுமே. அதுவும் காவல் துறை உதவியோடு.

இந்தியாவின் உள்துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கிவரும் பிரிவான Counter Terrorism and Counter Radicalization Division இந்த நாட்டில் பதிவு செய்யப்படும் அத்தனை FIR-களையும் கவனிக்கிறது. அத்தோடு நாட்டிற்கு எதிரான சமூகவலைதள பதிவுகள் வரை CTCR Division கண்காணித்து வருகிறது. ஆனால், வலது சாரி அமைப்பினர், பசு பாதுகாப்பு குழுவினர் சட்டவிரோத துப்பாக்கிகள்  மூலம் தினந்தோறும் நிகழ்த்திவரும் எதையும் கண்டுகொள்வதில்லை Counter Terrorism and Counter Radicalization Division.

ஒரு வேளை ஜெய்ஸ்ரீராம்..பாரத் மாத்கீஜே..என முழங்கும் நபர்கள் சட்டவிரோத துப்பாக்கிகளை பயன்படுத்த இந்தியாவின் ஆயுத சட்டம் அனுமதிக்கிறதா என்று உள்துறை அமைச்சகம் நிச்சயம் தெளிவுபடுத்த வேண்டும்.

ஹிந்து அமைப்பினர் சட்டவிரோத துப்பாக்கிகள் வைத்துக்கொள்ள சிறப்பு அனுமதியை வழங்கியுள்ளதா உள்துறை அமைச்சகம் ?

03-03-2015 அன்று மக்களவையில் இந்தியாவில் புழக்கத்தில் இருக்கும் சட்ட விரோத துப்பாக்கிகள் குறித்து எந்த தரவுகளும் இல்லை என்று உள்துறை அமைச்சகம் கூறியுள்ளது. பறிமுதல் செய்யப்படும் துப்பாக்கிகள் சம்பந்தப்பட்ட வழக்கு முடிந்த பிறகு, நீதிமன்ற அனுமதியோடு முறையாக DISPOSAL செய்யப்படுகிறதா என்ற கேள்வியை உள்துறை அமைச்சகத்திடம் RTI சட்டத்தின் படி முன்வைத்தால், எந்த தரவுகளின் வடிவத்திலும் இல்லாத பதிலை தர இயலாது என்று உள்துறை அமைச்சகம் பதிலளிக்கிறது.

Illegal Fire Arms அழிக்கப்படுவதை கண்காணிக்கும் நடைமுறையும் இல்லை. அது தொடர்பான ஒருங்கிணைக்கப்பட்ட எந்தவிதான தரவுகளும் இல்லை என்கிறது இந்திய அரசு. மிகவும் ஆபத்தான இவ்விஷயத்தில் உண்மையிலேயே உள்துறை அமைச்சகம் அஜாக்கிரதையாக இருக்கிறதா? அல்லது தெரிந்தே தான் அனுமதிக்கிறதா? என்ற கேள்வி எழுவதை நிச்சயம் தவிர்க்க இயலவில்லை.

பறிமுதல் செய்யப்படும் ஆயுதங்கள் முறையாக அழிக்கப்படுகிறதா என்ற கேள்விக்கு உள்துறை அமைச்சகம் வழங்கியுள்ள பதில்

அதன் காரணமாகவே, இந்த சந்தேகத்தையும் உள்துறை அமைச்சகத்தின் மீது எழுப்ப வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. 2014 முதல் 2016 வரையிலான காலக்கட்டத்தில் பறிமுதல் செய்யப்பட்ட சட்டவிரோத துப்பாக்கிகள், ஹிந்து அமைப்பினர் மற்றும் பசு பாதுகாப்பு கும்பல்களின் பயன்பாட்டிற்காக ரகசியமாக ஏதும் வழங்கப்பட்டுள்ளதா என்ற சந்தேகம் இயல்பாகவே எழுகிறது.

உண்மையில்,சாதாரண மக்களுக்கு பெரும் அச்சறுத்தலை ஏற்படுத்தும், தீங்கை விளைவிக்கும் வகையில் கட்டுகடங்காமல் அதிகரித்து வரும் இந்த சட்டவிரோத துப்பாக்கி கலாச்சாரத்தை மத்திய அரசு போர்கால அடிப்படையில் கட்டுப்படுத்த வேண்டியது மிக மிக அவசியம்.

குறிப்பாக வடக்கு மற்றும் மத்திய மாநிலங்களில் ஹிந்துத்துவ மற்றும் பசு பாதுகாப்பு அமைப்பினர் வசம் இருக்கும் அத்தனை சட்டவிரோத துப்பாக்கிகளையும் பறிமுதல் செய்ய மாநில காவல்துறை தலைவர்களுக்கு உள்துறை அமைச்சகம் உடனடியாக உத்தரவிடவேண்டும்.

இல்லையேல், ஜெய்ஸ்ரீராம் என முழக்கத்தோடு சுற்றித்திரியும் போலி தேச பக்தர்களால், இந்த நாடு மிகப்பெரும் மனிதப் பேரழிவை சந்திக்கும் நாள் வெகு தூரத்தில் இல்லை.

B.R அரவிந்தாக்ஷன்

Related News

Latest News