இந்தியா இந்த ஆண்டு இறுதிக்குள் ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதியை பெரும்பாலும் நிறுத்திவிடும் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் மீண்டும் கூறியுள்ளார்.
வெள்ளை மாளிகையில் அக்டோபர் 22 அன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், ‘இந்தியா என்னிடம் ஏற்கனவே ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் வாங்குவதை நிறுத்தப் போவதாக தெரிவித்துள்ளது. இது திடீரென முடியாது, ஆனால் இந்த ஆண்டு இறுதிக்குள் 40% அளவுக்கு நிறுத்துவார்கள். பிரதமர் மோடியுடன் நான் நேற்று பேசினேன், அவர்கள் மிகவும் சிறப்பானவர்கள்’ என தெரிவித்துள்ளார்.
முன்னதாக அக்டோபர் 16-ம் தேதி ட்ரம்ப், ‘இந்தியா ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் வாங்குவதை நிறுத்துவதாக மோடி உறுதியளித்தார். இது உடனடியாக முடியாது, ஆனால் விரைவில் முடிவடையும். ரஷ்யாவை பொருளாதார ரீதியாக தனிமைப்படுத்த இது ஒரு முக்கிய படி. சீனாவுக்கும் அதே விதமாக செய்ய வேண்டும்’ எனவும் கூறியுள்ளார்.
இந்த கருத்துக்களுக்கு இந்திய வெளியுறவுத்துறை உடனடியாக மறுப்பு தெரிவித்துள்ளார். வெளியுறவு அமைச்சகத்தின் அதிகாரப்பூர்வ செய்தியாளர் ரந்திர் ஜெய்ஸ்வால், ‘இந்தியா எண்ணெய் மற்றும் எரிவாயுவை கணிசமாக இறக்குமதி செய்யும் நாடு. சர்வதேச சந்தையில் எண்ணெய் விலை நிலையாக இல்லாமல் உள்ள நிலையில், நுகர்வோரின் நலன்களைப் பாதுகாப்பதே எங்களின் முன்னுரிமை. நிலையான எண்ணெய் விலை மற்றும் பாதுகாப்பான விநியோகம் இந்தியாவின் எரிசக்தி கொள்கையின் இரட்டை இலக்குகள்’ என தெரிவித்தார்.
ஜெய்ஸ்வால் மேலும், ‘இந்தியா எரிசக்தி ஆதாரங்களை விரிவுபடுத்தி, சந்தை நிபந்தனைகளை பூர்த்தி செய்ய பல்வகைப்படுத்தப்பட்ட கொள்முதல் செயல்முறைகளை முன்னெடுத்து வருகிறது. அமெரிக்காவுடன் எரிசக்தி ஒத்துழைப்பு ஆழப்படுத்தப்படும் விவாதங்கள் நடக்கின்றன’ என்றார்.
இந்த விவகாரம், இந்தியாவின் எரிசக்தி கொள்கை மற்றும் சர்வதேச உறவுகளின் சூழ்நிலை குறித்து புதிய பரிமானங்களை வெளிப்படுத்துகிறது.
