ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் இன்று இந்தியாவுக்கு வருகிறார். அப்போது பிரதமர் நரேந்திர மோடியுடன் அவர் நடத்த உள்ள சந்திப்பை உலகம் உலகமே உற்று நோக்குகிறது. ரஷ்யாவின் எண்ணெய் திட்டங்கள், அமெரிக்காவின் வர்த்தக அழுத்தம் மற்றும் பாதுகாப்பு ஒப்பந்தங்கள் என பல்வேறு அம்சங்கள் இந்த பயணத்தின் முக்கிய அம்சங்களாக உள்ளன.
ரஷ்யா தனது எண்ணெய் மற்றும் எரிசக்தி திட்டங்களுக்கு இந்தியா உதவ வேண்டும் என எதிர்பார்க்கிறது. மறுபுறம், அமெரிக்காவின் வரிகள் மற்றும் தடைகள் அதிகரித்து வரும் சூழலில், வர்த்தக மற்றும் பாதுகாப்பு ஒத்துழைப்பை எப்படிச் சமநிலைப்படுத்துவது என்பதில் புது டெல்லி கவனமாக ஆதி எடுத்து வைக்கிறது.
புதினுடன் இந்தியா வரும் ரஷ்யக் குழுவில் ஸர்பேங்க், ரோசோபோரோனெக்ஸ்போர்ட், ரோஸ்நெஃப்ட், காஸ்ப்ரோம் போன்ற முக்கிய நிறுவனங்களின் தலைவர்கள் இடம் பெறுவார்கள்.
மேற்கத்திய தடைகள் வர்த்தக சங்கிலிகளை பாதித்துள்ளதால், தொழில்நுட்ப உதவி மற்றும் உதிரிப்பாகங்களை வழங்க இந்தியா முன்வருமா என்பது முக்கிய கேள்வியாகும். சகாலின்-1 திட்டத்தில் ஓஎன்ஜிசி விதேஷ் லிமிடெட்டின் பங்குகளை மீண்டும் இயக்குவது குறித்தும் பேச்சுவார்த்தை நடத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
வர்த்தகம் மற்றும் எண்ணெய் தொடர்பான சிக்கல்கள் இருந்தாலும், இந்தியா-ரஷ்யா பாதுகாப்பு உறவு தொடர்ந்தும் வலுவாக உள்ளது. சுகோய்-30 விமானங்கள் இந்திய வான்படையின் முக்கிய ஆற்றலாக உள்ள நிலையில், Su-57 விமானத்தையும் இந்தியாவுக்கு வழங்க ரஷ்யா முன்வந்துள்ளது. S-400 அமைப்பின் விநியோகம் மற்றும் அடுத்தடுத்த யூனிட்கள் பற்றியும் பேசப்படலாம்.
மொத்தத்தில், மோடி-புதின் சந்திப்பு வெறும் பாதுகாப்பு ஒப்பந்தத்திற்காக மட்டுமல்ல; இரு வல்லரசுகளுடன் இந்தியா காக்கும் சமநிலையை தீர்மானிக்கும் முக்கியமான அரசியல்-பொருளாதார உரையாடலாக இருக்கும் என கருதப்படுகிறது. இதனால் சர்வதேச நாடுகளின் கவனத்தை இந்தியா தற்போது ஈர்த்துள்ளது.
