உலக சந்தையில் இந்தியா உட்பட பல நாடுகளுக்கு டாலர் பெரும் அச்சுறுத்தலாக இருப்பதால் அதற்கு மாற்றாக கோல்டு Stablecoin-களை பயன்படுத்த பிரிக்ஸ் நாடுகள் முயற்சி செய்கின்றன.
இதை பயன்படுத்துவதன் மூலம் பணவீக்கம், பணமதிப்பு நீக்கம் போன்ற பிரச்சனைகள் ஏற்படுவதற்கான வாய்ப்பு குறைவு என்று கிரிப்டோ வல்லுனரும் எல் சால்வடார் அரசு ஆலோசகருமான மேக்ஸ் கெய்சர் கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Stablecoin என்பது ஒரு டிஜிட்டல் கரன்சி போன்றது. நீங்கள் எவ்வளவு தங்கத்தை வைத்திருக்கிறீர்களோ, அந்த அளவுக்கான மதிப்பில் பணம் உங்களிடம் இருக்கும். உதாரணமாக நீங்கள் ஒரு கிராம் தங்கம் வைத்திருக்கிறீர்கள் எனில், உங்களிடம் ஒரு கோல்டு ஸ்டேபிள்காயின் இருக்கிறது என்று அர்த்தம். இதனை வைத்து வர்த்தகம் செய்யலாம்.
இந்நிலையில் பிரிக்ஸ் நாடுகளுக்கு என ஒரு பொதுவான கரன்சியை உருவாக்க முயன்றது. ஆனால், அப்படி ஏதாவது உருவானால் பிரிக்ஸ் நாடுகள் மீது கூடுதல் வரியை போடுவோம் என அமெரிக்கா எச்சரித்ததால் பிரிக்ஸ் நாடுகளுக்கு என தனி கரன்சி திட்டம் தள்ளி போனது. இந்த சூழலில் பிரிக்ஸ் கரன்சி மற்றும் டாலர் என இரண்டுக்கும் மாற்றாக கோல்டு ஸ்டேபிள்காயினை உருவாக்க பிரிக்ஸ் திட்டமிட்டு வருவதோடு இதில் இந்தியாவின் பங்கு மிக முக்கியமானதாக இருக்கும் என மேக்ஸ் கெய்சர் கூறியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
உலகில் தங்கம் அதிகம் புழங்கும் நாடுகளில் இந்தியாவும் ஒன்று. இந்தியாவில் தங்கம் என்பது மதிப்பிற்குரிய ஒன்றாகவே பார்க்கப்படுகிறது. விழா நாட்களிலும், திருமணம் உள்ளிட்ட கொண்டாட்டங்களின்போதும் தங்கம் வாங்குவது ஒரு நடைமுறையாக இந்தியாவில் இருப்பதால் கோல்டு ஸ்டேபிள்காயின் இந்தியாவில் சிறப்பாக இயங்கும் என்ற பெரும் எதிர்ப்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.